உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ஷாஸார் ரிஸ்வி புதிய உலக சாதனை படைத்தும், தங்கம் வென்றும் அசத்தியுள்ளார்.

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிமெக்ஸிகோவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியாவின் ஷாஸார் ரிஸ்வி ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் 242.3 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார்.

ஒலிம்பிக் நடப்புச் சாம்பியனான ஜெர்மனியின் கிறிஸ்டியன் ரீட்ஸ் பின்னுக்குத் தள்ளி தங்கம் வென்றுள்ளார் ரிஸ்வி. இது அவரது முதல் உலகக் கோப்பை போட்டியாகும்.

கிறிஸ்டியன் ரீட்ஸ் 239.7 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்தியரான ஜிது ராய் 219 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இந்த பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்த மேலும் ஒரு இந்தியரான ஓம் பிரகாஷ் மிதர்வால் 198.4 புள்ளிகளுடன் 4-ஆவது இடம் பிடித்தார்.

இதனிடையே, மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் இந்தியாவின் மெஹுலி கோஷ் 228.4 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றார்.

இதேபிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்த மேலும் இரு இந்தியர்களான அஞ்சும் முட்கில் 208.6 புள்ளிகளுடன் 4-ஆம் இடமும், அபூர்வி சந்தேலா 144.1 புள்ளிகளுடன் 7-ஆம் இடமும் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.