இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் 245 ரன்கள் என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, தொடக்கத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து திணறிவருகிறது. 

 இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. நான்காவது டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்களும் இந்திய அணி 273 ரன்களும் எடுத்தன. 

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, மூன்றாம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்திருந்தது. 37 ரன்களுடன் சாம் கரன் களத்தில் நின்றார். நான்காம் நாளான இன்று சாம் கரனுடன் ஸ்டூவர்ட் பிராட் களமிறங்கினர். இன்றைய நாளின் முதல் பந்திலேயே பிராட் அவுட்டானார். இதையடுத்து ஆண்டர்சன் களமிறங்கினர். சாம் கரன் 46 ரன்களில் ரன் அவுட்டாக, அந்த அணி 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியை விட 244 ரன்கள் முன்னிலை பெற்றது இங்கிலாந்து. 

245 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுல் ரன் ஏதும் எடுக்காமல் பிராடின் பந்தில் போல்டாகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து புஜாரா 5 ரன்களிலும் தவான் 17 ரன்களிலும் வெளியேறினர். இதையடுத்து 22 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. 

இந்த இக்கட்டான சூழலில் கோலியும் ரஹானேவும் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடிவருகின்றனர். தொடக்கத்திலேயே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதால் நம்பிக்கையுடன் ஆடிவருகிறது இங்கிலாந்து அணி. இந்திய அணி விக்கெட்டை இழந்தும் விடக்கூடாது, அதேநேரத்தில் ரன்களையும் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் ஆடிவருகிறது.