india loses 6 wickets in first ODI against srilanka
28 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறி வருகிறது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி தரம்சாலாவில் இன்று நடந்துவருகிறது. கேப்டன் கோலி ஓய்வில் உள்ளதால் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுகிறார்.
டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திசாரா பெரேரா முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் ஷிகர் தவனும் இலங்கை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர்.
மேத்யூசின் பந்துவீச்சில், ரன் ஏதும் எடுக்காமல் ஷிகர் தவன் வெளியேறினார். லக்மலின் பந்து நன்றாக ஸ்விங் ஆனது. அதனால் அவரது பந்துவீச்சை எதிர்கொள்ள திணறிய ரோஹித், 2 ரன்னில் லக்மலின் பந்துவீச்சில் வெளியேறினார்.
18 பந்துகளில் ரன் ஏதும் அடிக்காமல் தினேஷ் கார்த்திக்கும் அவரைத்தொடர்ந்து மனிஷ் பாண்டே 2 ரன்களுக்கும் வெளியேறினார். மறுமுனையில் சற்று கவனமாக ஆடிய ஷ்ரேயாஸ் ஐயரும் 9 ரன்களுக்கு போல்டாகி பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து தோனியும் ஹர்திக் பாண்டியாவும் ஜோடி சேர்ந்து ஆடிவருகின்றனர். ஒருநாள் போட்டியில் விரைவாக பேட்டிங் கிடைக்காத ஹர்திக் பாண்டியாவிற்கு, 14வது ஓவரிலேயே களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால், அதைப் பயன்படுத்தாத பாண்டியா, 10 ரன்களுக்கு வெளியேறினார். இலங்கையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி திணறி வருகிறது.
