இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் இங்கிலாந்து அணியின் நிலையை பயன்படுத்திக்கொண்டு இந்திய அணி சிறப்பாக ஆடுவது அவசியம்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்திருந்தாலும், மூன்றாவது போட்டியில் சிறப்பாக ஆடி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்நிலையில் அடுத்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றால்தான் தொடரை வெல்லும் வாய்ப்பு இருக்கும். ஒருவேளை அடுத்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் தொடரை வென்றுவிடும். எனவே இந்த தொடரை வெல்வதற்கான வாய்ப்பை தக்கவைத்து கொள்ள அடுத்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும். 

ஆகஸ்ட் 30ம் தேதி நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் முக்கியமான வீரர்கள் ஆடுவது சந்தேகம். அதை இந்திய அணி முறையாக பயன்படுத்தி சிறப்பாக ஆடினால் வெற்றி பெறலாம். இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவிற்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது கைவிரலில் காயம் ஏற்பட்டது. எனவே அவரது காயம் குணமடைவதை பொறுத்துத்தான் அவர் ஆடுவார? இல்லையா? என்பது தெரியும். எனினும் அவர் ஆட வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. 

இங்கிலாந்து அணியின் அனுபவ தொடக்க வீரர் அலெஸ்டர் குக்கின் மனைவி கர்ப்பமாக உள்ளார். அடுத்த வாரம் குக்கின் மனைவிக்கு மூன்றாவது குழந்தை பிறக்க உள்ளது. எனவே அந்த நேரத்தில் குக் சென்றுவிடுவார் என கூறப்படுகிறது. அதனால் குக் ஆடுவதும் சந்தேகம்தான். 

மேலும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸுக்கும் முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவரது காயமும் குணமடைவதை பொறுத்துத்தான் அவர் ஆடுவது குறித்தும் அறிவிக்கப்படும்.

இவ்வாறு இங்கிலாந்து அணியின் முக்கியமான மூன்று வீரர்கள் நான்காவது டெஸ்டில் விளையாடுவார்களா என்ற ஐயம் உள்ளது. அவர்கள் ஆடுவதற்கான வாய்ப்பு குறைவு என்றுதான் கூறப்படுகிறது. இந்திய அணி மீண்டெழுந்துள்ள இந்த நிலையில், அவர்கள் அந்த அணிக்காக ஆடவில்லையென்றால், அதை பயன்படுத்திக்கொண்டு அடுத்த போட்டியிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெறலாம்.