In the first match Goa West Bengal leading
71-ஆவது சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியில் கோவா, மேற்கு வங்கம் அணிகள் வெற்றிப்பெற்று முன்னணியில் இருக்கின்றன.
71-ஆவது சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டி கோவாவில் நேற்றுத் தொடங்கியது.
இதில் பாம்போலிம் நகரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கோவா அணி 2-1 என்ற கோல கணக்கில் மேகாலயா அணியைத் தோற்கடித்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தில் இறங்க, 49-ஆவது நிமிடத்தில் கோவாவின் மந்த்ரேக்கர் கோலடித்தார். அதைத் தொடர்ந்து 51-ஆவது லிஸ்டான் கோலடிக்க, கோவா அணி 2-0 என முன்னிலை பெற்றது.
இதன்பிறகு 53-ஆவது நிமிடத்தில் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை பயன்படுத்தி மேகாலயாவின் எனெஸ்டர் கோலடித்தார். ஆனால் இதன்பிறகு கோல் எதுவும் விழவில்லை. இதனால் கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
நவேலிம் நகரில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் மேற்கு வங்க அணி 1-0 என்ற கோல் கணக்கில் சண்டீகர் அணியைத் தோற்கடித்தது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது. தொடர்ந்து நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் அபாரமாக ஆடியபோதும் 89-ஆவது நிமிடம் வரை கோலடிக்க முடியவில்லை.
இதனால் ஆட்டம் டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 90-ஆவது நிமிடத்தில் பந்தை தன்வசப்படுத்திய மேற்கு வங்க வீரர் சனிக் மர்மு, சண்டீகர் பின்கள வீரர்களைத் தாண்டி மாற்று ஆட்டக்காரரான எஸ்.கே.பெய்ஸ்க்கு பந்தைக் கடத்தினார்.
அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட பெய்ஸ், மிக அற்புதமாக சண்டீகர் கோல் கீப்பரை வீழ்த்தி கோலடித்தார். இதனால் மேற்கு வங்க அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
