களத்தில் மிகவும் மோசமாக நடந்துகொள்ளும் வார்னரையும் அவரை ஊக்குவிக்கும் கேப்டன் ஸ்மித் மற்றும் பயிற்சியாளர் டேரன் லீமெனையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் கடும் காட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின்போது வார்னர் மற்றும் டிகாக்கு இடையே மோதல் மூண்டது. வார்னரும் டி காக்கும் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவானது.

இதுதொடர்பாக இரு அணி நிர்வாகமும் அளித்த புகாரின்பேரில் இருவரிடமும் நடுவர் விசாரணை நடத்தினார். அதில் இருவர் மீதும் தவறு இருந்ததால், இருவருக்கும் அபாரதம் விதிக்கப்பட்டதோடு ஒரு டீமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டது. 

இந்நிலையில், களத்தில் வார்னரின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல், வார்னரை அவ்வாறாக செயல்பட ஊக்குவிக்கும் கேப்டன் ஸ்மித் மற்றும் பயிற்சியாளர் லீமென் ஆகியோரையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

களத்தில் வார்னர் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கும் அவரது செயல்பாடுகளுக்கும் அவரே பொறுப்பாகிறார். ஆனால் அவரை நாயாக கடித்து குதற தூண்டுவது அவருக்கு மேல் உள்ளவர்கள். களத்தில் நடக்கும் இத்தகைய மோசமான செயல்களுக்கு கேப்டனே பொறுப்பு என்கிறது விதிமுறைகள். எனவே ஸ்டீவ் ஸ்மித் இதனைத் தடுக்கவில்லை எனும்போது அவரும் இதற்குக் கூட்டாளியே.
 
வார்னரை மிகவும் மோசமாக செயல்பட தூண்டும் கேப்டன் ஸ்மித் மற்றும் பயிற்சியாளர் லீமென் ஆகியோரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அதுவே சரியான நடவடிக்கையாக இருக்கும் என சேப்பல் வலியுறுத்தியுள்ளார்.