டெஸ்ட் தொடரில் கிரிக்கெட் பந்தை சேதப்படுத்தியது தொடர்பான புகாரில் தனக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யபோவதில்லை என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்காவுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது கிரிக்கெட் பந்தை சேதப்படுத்தியதாக ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகிய வீரர்கள் மீது புகார்கள் எழுந்தன. 

இதுதொடர்பாக விசாரணை நடத்திய கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு மூவருக்கும் தலா ஓராண்டு தடை விதித்து உத்தரவிட்டது. 

தடையை எதிர்த்து முறையீடு செய்ய மூவருக்கும் வரும் 11-ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது. இதற்கிடையே இதுதொடர்பாக ஸ்டீவ் ஸ்மித், "எனக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை. இந்த தண்டனை எனக்கு கிடைக்க வேண்டியது தான். இதன் மூலம் மற்றவர்களுக்கும் கடினமான எச்சரிக்கையாக அமையும்"என்று கூறினார்..

இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத் தலைவர் கிரெக் டயர் ஓராண்டு தடை விதிக்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளார்.  "பந்தை சேதப்படுத்திய புகார் தொடர்பாக கடினமான தண்டனை அளிக்க வேண்டியதில்லை" என்றார்.