தோனியிடம் இருந்து நுண்ணறிவையும், டுவெய்ன் பிராவோவிடம் இருந்து எனது மெதுவான பந்துவீச்சை மேம்படுத்தும் ஆலோசனைகளையும் பெற விரும்புகிறேன் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ள இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இணையதளத்தில் கூறியது:

"போட்டிகளின்போது எப்போதுமே நெருக்கடியான சூழலில் விளையாடவே விரும்புகிறேன். அப்போதுதான் இக்கட்டான சூழல்களையும் சமாளிக்கும் திறனை வளர்த்துக்கொள்ள இயலும்.

ஒவ்வொரு தருணத்திலும் எதிர்பார்த்தது போலவே பந்துவீசுவது இயலாத ஒன்று. ஆனால், ஒவ்வொரு பந்தையும் முழுதிறனை வெளிப்படுத்தி உறுதியுடன் வீச வேண்டும்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவது பெருமை மிக்க ஒன்றாகும். கேப்டன் தோனி மற்றும் டுவெய்ன் பிராவோ ஆகியோருடன் இணைந்து பணியாற்ற ஆர்வமுடம் உள்ளேன்.

தோனியிடம் இருந்து நுண்ணறிவையும், டுவெய்ன் பிராவோவிடம் இருந்து எனது மெதுவான பந்துவீச்சை மேம்படுத்தும் ஆலோசனைகளையும் பெற விரும்புகிறேன்.

ஐபிஎல் என்பது ஒரு போட்டியாக விளையாடுவதற்கு மட்டுமல்லாமல், ஒரு சிறப்பான அணியாக சேரவும் வழிவகுக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 'மேட்ச் வின்னர்'ஆக விரும்புகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.