ஐபிஎல் தொடரில் இதுவரை 11 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 12வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ள நிலையில், இந்த சீசனுக்கான ஏலம் இன்று மதியம் 2.30 மணிக்கு ஜெய்ப்பூரில் தொடங்குகிறது. 

இந்த ஏலத்தில் 351 வீரர்கள் ஏலம் விடப்பட உள்ளனர். இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத பஞ்சாப், பெங்களூரு, டெல்லி ஆகிய மூன்று அணிகளும் இந்த சீசனையாவது வென்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளன. 

இந்த மூன்று அணிகளில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணியிடம் அதிகமான தொகை இருப்பு உள்ளது. பஞ்சாப் அணியிடம் ரூ.36.2 கோடியும் டெல்லி அணியிடம் ரூ.25.5 கோடியும் இருப்பு உள்ளது. இந்த ஐபிஎல் ஏலத்தில் அதிகபட்ச தொகை எடுத்து வாங்கப்பட கூடிய வீரராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் ஷிம்ரன் ஹெட்மயர் திகழ்வார். 

அண்மைக்காலத்தில் அவரது ஆட்டத்தால் உலகளவில் கவனத்தை ஈர்த்தவர் ஹெட்மயர். அண்மையில் இந்தியாவுக்கு எதிரான தொடரில் அவரது ஆட்டம் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக ஸ்பின் பவுலிங்கின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடினார். 

மெக்கல்லம், கோரி ஆண்டர்சன், இயன் மோர்கன் போன்ற பெரிய வீரர்கள் ஏலத்தில் இருந்தாலும் ஹெட்மயர் தான் அதிக விலைக்கு ஏலம் போவதற்கான வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே இவரை எடுப்பது குறித்து பஞ்சாப் அணி மறைமுகமாக கருத்து தெரிவித்திருந்தது. எனவே இவரை எடுக்க அந்த அணி முனையும். ஹெட்மயரை எடுப்பதில் போட்டி நிலவினால், அது பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே மட்டும்தான் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் மற்ற அணிகளை விட இந்த இரண்டு அணிகளும் தான் அதிகமான தொகையை கையிருப்பில் வைத்துள்ளன. 

ஹெட்மயருக்கான டிமேண்ட் அதிகரித்தால் குறைந்த தொகையை வைத்துள்ள மற்ற அணிகள், அவரை அதிகமான தொகைக்கு எடுக்க யோசிக்கும். ஆனால் பஞ்சாப் அணிக்கு அந்த பிரச்னை கிடையாது என்பதால், அவரை எடுப்பதில் அந்த அணிக்குத்தான் அதிக வாய்ப்புள்ளது. மேலும் அந்த அணி அவரை எடுப்பதில் ஆர்வமாகவும் உள்ளது.