இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் சென்று ஆடிவரும் இந்திய அணியின் வீரர் ஹர்திக் பாண்டியாவின் செயல், இங்கிலாந்தில் பலரது இதயங்களை வென்றுள்ளது. 

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் முடிந்துவிட்டன. தற்போது டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இந்த போட்டியில் கடைசி நேரத்தில் வெற்றிக்காக ஹர்திக் பாண்டியா போராடினார். ஆனாலும் இலக்கை எட்டமுடியாமல் அவுட்டானதால் இந்திய அணி தோல்வியடைந்தது. 

இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, அணியில் நிரந்தர இடம்பிடித்துள்ளார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தனி நபராக போராடிய ஹர்திக் பாண்டியாவின் ஆட்டம், அந்த போட்டியை கண்டோருக்கு மிரட்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. 

அதன்பிறகு ஹர்திக் பாண்டியா அணியில் நிரந்தர இடம் பிடித்தார். ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, முன்னாள் கேப்டனும் சிறந்த ஆல்ரவுண்டருமான கபில் தேவுடன் ஒப்பிடப்பட்டார். ஆனால் அந்த ஒப்பீட்டை நியாயப்படுத்தும் வகையிலான ஆட்டத்தை இதுவரை ஹர்திக் பாண்டியா வெளிப்படுத்தவில்லை. ஆனாலும் ஹர்திக் பாண்டியாவின் திறமை மீது அணி நிர்வாகம் பெரும் நம்பிக்கை வைத்துள்ளது. பேட்டிங், பவுலிங் அல்லது ஃபீல்டிங் என ஏதாவது ஒரு வகையில் அணிக்கு சிறப்பான பங்களிப்பை பாண்டியாவும் அளித்துவிடுகிறார். 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் பாண்டியா பெரிதாக சோபிக்கவில்லை. அவரது ஆட்டத்தால் இங்கிலாந்தில் யாரையும் கவரவில்லை என்றாலும், அவரது செயலால் பலரது மனதை கவர்ந்துள்ளார் ஹர்திக் பாண்டியா.

முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ஜூலை மாதம் 30ம் தேதி பாண்டியா, ராகுல், இஷாந்த் சர்மா ஆகிய மூவரும் பிர்மிங்காம் நகரில் ஒரு ஹோட்டலுக்கு இரவு உணவு சாப்பிட சென்றுள்ளனர். சாப்பிட்டுவிட்டு மீண்டும் அறைக்கு காரில் திரும்பியுள்ளனர். அப்போது திடீரென ஒரு ஹோட்டலின் வாயிலில் காரை நிறுத்தி, ஹோட்டலுக்குள் சென்று அங்கு பணிபுரிபவரிடம் ஒரு பார்சலை கொடுத்துள்ளார் பாண்டியா. 

பின்னர் அந்த ஹோட்டல் ஊழியரிடம், இது நாங்கள் சாப்பிடும்போது எஞ்சிய உணவு. ஆனால் நாங்கள் எச்சில் செய்யவில்லை. ஃபிரெஷ்ஷான உணவுதான். எனவே சாப்பாடு இல்லாத யாருக்காவது இந்த உணவை கொடுத்துவிடுங்கள் என பாண்டியா கூறியுள்ளார். இதைக்கேட்ட அந்த ஹோட்டல் ஊழியர், கண்டிப்பாக கொடுத்துவிடுகிறேன் சார் என கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த ஹோட்டலில் இருந்தவர்களை கவர்ந்துள்ளது.