ரோஹித் சர்மா - விராட் கோலி ஆகிய இருவருமே சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சிறந்த பேட்ஸ்மேன்களாக திகழ்கின்றனர். விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் உட்பட அனைத்துவிதமான போட்டிகளிலும் சிறந்து விளங்குகிறார். ஆனால் ரோஹித் சர்மா, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே நிரந்தரமாக ஆடுகிறார் என்றாலும் அவை இரண்டிலும் தலைசிறந்து விளங்குகிறார். 

விராட் கோலி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் நிலையில், அவருக்கு சற்றும் சளைத்தவராக இல்லாமல் ரோஹித் சர்மாவும் அபாரமாக ஆடி பல மைல்கற்களை எட்டிவருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் யோசித்தே பார்க்கமுடியாத அளவிற்கு, 3 இரட்டை சதங்களை விளாசி ஜாம்பவனாக திகழ்கிறார் ரோஹித் சர்மா. களத்தில் நிலைத்துவிட்டால் பெரிய இன்னிங்ஸ் ஆடுவதில் ரோஹித் சர்மாவிற்கு நிகர் ரோஹித் சர்மாதான். 

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி முதலிடத்திலும் ரோஹித் சர்மா இரண்டாமிடத்திலும் உள்ளனர். நம்பரின் அடிப்படையில் விராட் கோலி ரோஹித் சர்மாவைவிட முன்னால் இருந்தாலும் திறமையின் அடிப்படையில் இருவரில் யார் பெஸ்ட் என்று சொல்வது கடினம்.

இந்நிலையில், ஸ்போர்ட்ஸ் டாக்கிற்கு ஹர்பஜன் சிங் அளித்த பேட்டியில், ரோஹித் - கோலி இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஹர்பஜன் சிங், இது மிகவும் கடினமான கேள்வி. ரோஹித் - கோலி இருவருமே மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள், இருவருமே மேட்ச் வின்னர்கள். அவர்களது சாதனைகளே அவர்கள் யார் என்பதை சொல்லும். ரோஹித் சர்மா அபாரமான திறமைசாலி, விராட் கோலி கடும் உழைப்பாளி. ரோஹித் அளவிற்கு இயல்பாகவே கோலி திறமையான பேட்ஸ்மேன் இல்லையென்றாலும் தனது கடும் உழைப்பால் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார். எனவே இருவரில் ஒருவரை தேர்வு செய்வது மிகவும் கடினம் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துவிட்டார். 

விராட் கோலி தனது கடும் உழைப்பின் மூலம் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார் என்று ஹர்பஜன் சிங் கூறியிருந்தாலும், இயல்பாக ரோஹித் அளவிற்கு கோலி திறமையானவர் இல்லை என்று கூறியிருக்கிறார்.