பாகிஸ்தான் முன்னாள் வீரர் யூசுப் யுகானாவிற்கும் ஹர்பஜன் சிங்கிற்கும் இடையே நடந்த அடிதடி சண்டையை கங்குலி தனது சுயசரிதையில் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, தனது கிரிக்கெட் வாழ்வின் நினைவுகளை சுயசரிதையாக எழுதியுள்ளார். அதில், பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை கங்குலி பகிர்ந்துள்ளார்.

2003 உலக கோப்பையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே கடைசி லீக் போட்டி நடந்தது. அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

அந்த போட்டியின்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை கங்குலி சுயசரிதையில் தெரிவித்துள்ளார். அந்த போட்டி தென்னாப்பிரிக்காவின் செஞ்சூரியனில் நடைபெற்றது. 

இதுதொடர்பாக சுயசரிதையில் எழுதியுள்ள கங்குலி, அந்த போட்டியின் மதிய உணவு இடைவேளையின் போது யூசுப் யுகானாவிற்கும்(பின்னர் முகமது யூசுப் என பெயரை மாற்றிக்கொண்டார்) ஹர்பஜன் சிங்கிற்கும் இடையே திடீரென சண்டை நடந்தது. இருவருக்கும் இடையே கடுமையான கைகலப்பு ஆனது. இருவரும் பரஸ்பரம் தாக்கிக்கொண்டனர்.

இதைக்கண்டு இரு அணியின் சீனியர் வீரர்களும் பதறிப்போயினர். அதன்பிறகு இருவரையும் தனித்தனியாக அழைத்து சென்றோம். சும்மாவே இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றால், பதற்றமான சூழல் நிலவும். அதிலும் இரு அணியின் வீரர்களுக்கும் சண்டை என்று தெரிந்தால் பெரிய பிரச்னை ஆகிவிடும். ஆனால் இந்த சண்டை நடந்தது வெளியே தெரியாது என கங்குலி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஹர்பஜன் சிங் மிகச்சிறந்த வீரர் எனவும் ஆனால் சற்று கோபக்காரர் எனவும் கங்குலி அதில் எழுதியுள்ளார்.