கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பேட்டிங் ஆடி, இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட ஹனுமா விஹாரி, இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் களத்தில் நங்கூரமிட்டு நின்ற குக் மற்றும் ரூட்டை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி அசத்தினார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தவிர்க்க போராடிவருகிறது. இந்த தொடரை 1-3 என ஏற்கனவே இந்திய அணி இழந்துவிட்ட நிலையில், கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 332 ரன்களும் இந்திய அணி 292 ரன்களும் எடுத்தன. 

40 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, 62 ரன்களுக்கே முதல் இரண்டு விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஆனால் கிரிக்கெட் வாழ்க்கையில் தனது கடைசி இன்னிங்ஸை ஆடிய அலெஸ்டர் குக் அபாரமாக ஆடி சதமடித்தார். அவருடன் சேர்ந்து சிறப்பாக ஆடிய ரூட்டும் சதமடித்தார். இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை தெளிவாக ஆடி ரன்களை குவித்தனர். இந்த விக்கெட்டை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர். 

பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, ஜடேஜா ஆகியோரால் பிரிக்க முடியாத இந்த ஜோடியை அறிமுக வீரர் ஹனுமா விஹாரி பிரித்தார். 125 ரன்கள் எடுத்து களத்தில் நங்கூரமிட்ட ஜோ ரூட்டை, விஹாரி வீழ்த்தினார். ரூட் அவுட்டானதற்கு அடுத்த பந்திலேயே அலெஸ்டர் குக்கும் அவுட்டானார். 147 ரன்கள் குவித்திருந்த அலெஸ்டர் குக், விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 

இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 259 ரன்களை குவித்தது. பிரிக்க முடியாத குக்-ரூட் ஜோடியை பிரித்ததோடு இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் அவுட்டாக்கி மிரட்டினார் விஹாரி. முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை அளித்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட விஹாரி, குக் மற்றும் ரூட்டின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி அசத்தினார். சாம் கரன் விக்கெட்டையும் அவர்தான் வீழ்த்தினார்.