இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என இங்கிலாந்து அணி வென்றுவிட்ட நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியிலும் இங்கிலாந்தின் கை ஓங்கியிருக்கிறது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 332 ரன்களும் இந்திய அணி 292 ரன்களும் எடுத்தது. 160 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியை விஹாரி - ஜடேஜா ஜோடி சிறப்பாக ஆடி மீட்டெடுத்தது. இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 77 ரன்களை சேர்த்தது. அறிமுக போட்டியிலேயே அரைசதம் கடந்த விஹாரி 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

விஹாரி - ஜடேஜா ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால்தான் இந்திய அணி, ஓரளவிற்கு நல்ல ஸ்கோரை எட்டியது. இல்லையென்றால் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தை விட அதிக ரன்கள் வித்தியாசம் அடைந்திருக்கும். விஹாரியின் நிதானமான தெளிவான ஆட்டத்தை கவாஸ்கர் பாராட்டியிருந்தார். 

தனது இன்னிங்ஸிற்கு பிறகு பேசிய விஹாரி, நான் இந்த போட்டியில் ஆடுவதற்கு முன்னதாக ராகுல் டிராவிட்டிடம் கால் செய்து பேசினேன். அப்போது பதற்றமில்லாமல், மன தைரியத்துடன் ரசித்து ஆடுமாறு டிராவிட் ஆலோசனை வழங்கினார். இந்தியா ஏ அணியிலிருந்து எனது வளர்ச்சியில் ராகுல் டிராவிட்டின் பங்கு அளப்பரியது. அவர் சொன்னதை மனதில் நிறுத்திக்கொண்டு களத்திற்கு சென்றேன். எனினும் களத்திற்கு செல்லும்போது சற்று பதற்றமாகத்தான் இருந்தது. அதை அதிகரிக்க விடாமல் பார்த்துக்கொண்டேன். களத்தில் நிலைக்கும் வரை பந்துகளை நிதானமாக எதிர்கொண்டு ஆடினேன். எதிர்முனையில் இருந்த கேப்டன் கோலியும் நம்பிக்கை அளித்துக்கொண்டே இருந்தார். எதிரணி வீரர்கள் களத்தில் எந்த மாதிரியான அணுகுமுறையை கையாண்டாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே தனது ஸ்டைல் என்று விஹாரி கூறியுள்ளார். 

இந்திய அணியில் மிகச்சிறந்த பங்களிப்பை அவர் ஆடிய காலத்தில் வழங்கிய ராகுல் டிராவிட், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றபிறகும் இந்திய அணியின் வளர்ச்சியில் பங்களிப்பு செய்துவருகிறார். 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணி, இந்தியா ஏ அணி ஆகியவற்றின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட், பல இளம் திறமைகளை வளர்த்தெடுத்து இந்திய அணிக்கு பரிசளித்து கொண்டிருக்கிறார். பிரித்வி ஷா, ஹனுமா விஹாரி, மயன்க் அகர்வால், ஷூப்மன் கில், கலீல் அகமது போன்ற இளம் திறமைகளை இந்திய அணிக்கு வழங்கியுள்ளார்.