சென்னை பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் சென்னை அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் திரில் வெற்றி பெற்றது.

இதுவரை தோனியின் தலைமையின் கீழ் ஆடிவந்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நேற்று கேப்டனாக தோனியை எதிர்த்து ஆடி வெற்றியும் கண்டுள்ளார்.

சென்னை அணி தடை செய்யப்படும் வரை சென்னை அணியிலும், 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் புனே அணியிலும் தோனியின் கேப்டன்சியின் கீழ் அஸ்வின் ஆடினார். இந்த ஆண்டு மீண்டும் சென்னை அணி களம் கண்ட நிலையில், இந்த முறை ஏலத்தில் அஸ்வினை சென்னை அணி தக்கவைக்கவில்லை. அஸ்வினை ஏலத்தில் எடுத்த பஞ்சாப் அணி, அவரையே கேப்டனாகவும் ஆக்கியது.

அஸ்வினின் கேப்டன்ஷிப்பை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். அதுவும் மற்ற அணிகளுடனான போட்டியை விட, ஒரு கேப்டனாக தோனியை எதிர்த்து சென்னை அணிக்கு எதிராக அஸ்வின் ஆடுவதை பார்க்க எதிர்பார்ப்பு எகிறியது.

இந்நிலையில், நேற்று நடந்த போட்டியில் தோனியின் கேப்டன்ஷிப்பை மிஞ்சும் அளவிற்கு வியூகங்களை வகுத்து சென்னை அணியை வீழ்த்தினார் அஸ்வின். சென்னை அணியில் 8 ஆண்டுகள் ஆடியுள்ளதால், வீரர்களை தோனி எப்படி பயன்படுத்துவார்? அவரது வியூகம் என்னவாக இருக்கும்? என்பதை எல்லாம் ஓரளவிற்கு அஸ்வினால் கணித்திருக்க முடியும்.

மேலும் மற்ற அணிகள் ஏலத்தில் எடுக்க மறுத்த கெய்லை அடிப்படை விலைக்கு பஞ்சாப் அணி எடுத்தது. கெய்லின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுடனான போட்டியில் கெய்லை பயன்படுத்தாத அஸ்வின், நேற்றைய போட்டியில் கெய்லை களமிறக்கினார்.

அஸ்வினின் இந்த வியூகம் மிகப்பெரிய பலனை தந்தது. சென்னை அணியில் 140 கிமீ-க்கு மேல் வேகமாக பந்துவீசக்கூடிய வீரர்கள் யாரும் இல்லை. ஷேன் வாட்சன், பிராவோ, சாஹர் ஆகியோர் 120-130 கிமீ வேகத்தில் பந்துவீசக்கூடியவர்கள். எனவே மிதமான வேகம் கொண்ட அவர்களின் பந்துகளை, கெய்ல் தெறிக்கவிடுவார் என்பதை உணர்ந்த அஸ்வின், கெய்லை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கினார்.

அஸ்வினின் நம்பிக்கையை கெடுக்காத, கிறிஸ் கெய்ல் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார். கெய்லை வீழ்த்துவதற்காக இரண்டாவது ஓவரை ஹர்பஜனிடம் கொடுத்தார் தோனி. ஆனால், தோனி விரித்த அந்த வலையில் சிக்காமல், நிதானமாக ஆடி பின்னர் அதிரடி காட்டி காரியத்தை சாதித்தார் கெய்ல்.

கெய்லின் அதிரடியான தொடக்கத்தால், 197 ரன்களை குவித்தது பஞ்சாப் அணி. அதன்பிறகு இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு எதிரான அஸ்வினின் பவுலிங் வியூகமும் நல்ல பலனளித்தது. 

வழக்கமாக தொடக்கத்தில் ஆரம்ப ஓவர்களை வீசும் அஸ்வின், நேற்று ஸ்ரான், மோஹித் சர்மா, டை ஆகியோரை தொடக்க ஓவர்களை வீசவிட்டு பவர்பிளேயில் சென்னை அணியின் ஸ்கோரை கட்டுக்குள் வைத்திருந்தார்.

10 ஓவருக்கு பிறகு அஸ்வின், முஜீபுர் ரஹ்மான் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி சென்னை அணியின் ரன் வேகத்தை உயரவிடாமல் பார்த்துக்கொண்டனர். ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது ராயுடுவின் விக்கெட். சிறப்பாக ஆடிவந்த ராயுடுவை ரன் அவுட்டாக்கி வெளியேற்றினார் அஸ்வின். 

அதன்பிறகு அதிரடி பேட்ஸ்மேனான பிராவோ களமிறக்கப்படுவார் என பார்த்தால், மாறாக ஜடேஜா களமிறக்கப்பட்டார். கடைசி ஓவர்களில் அதிரடியாக ஆட பிராவோ தேவை என்பதால், அவரை விடுத்து ஜடேஜாவை இறக்கினார் தோனி. ஆனால் தோனியின் அந்த வியூகம் பலனளிக்கவில்லை. வேகப்பந்துகளை எதிர்கொள்ள திணறிய ஜடேஜா, சில பந்துகளை வீணடித்தார். அதனால் இறுதியில் சென்னை அணிக்கு அழுத்தம் அதிகமானது. தோனி தனி ஆளாக எவ்வளவோ போராடியும் சென்னை அணி தோல்வியை தழுவியது. 

தன் மீதான விமர்சனங்களுக்கு அதிரடியான பேட்டிங்கால் பதிலடி கொடுத்து தனது பேட்டிங் திறமையை நிரூபித்த தோனி, கேப்டனாக நிரூபிக்க தவறிவிட்டார். தோனியின் கீழ் விளையாடி, கேப்டன்ஷிப் நுணுக்கங்களை கற்றறிந்த அஸ்வின், தோனியை விட சிறப்பாக வியூகங்களை வகுத்து தோனியையே வீழ்த்திவிட்டார்.