ரயில் விபத்தில் உயிர் பிழைத்த ஐஐடி பட்டதாரி: கோலி தான் ரோல் – பாராலிம்பிக் தங்கம் வென்ற நிதேஷ் குமாரின் கதை!
பாரிஸ் பாராலிம்பிக் 2024 இல் தங்கம் வென்ற நிதேஷ் குமார், ஒரு காலத்தில் ரயில் விபத்தில் கால் இழந்தவர். விராட் கோலியின் உறுதியை முன்னுதாரணமாகக் கொண்டு சாதித்த அவரது கதை.
பாரிஸ் பாராலிம்பிக் 2024 பேட்மிண்டன் ஆண்களுக்கான ஒற்றையர் எஸ்.எல்3 பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நிதேஷ் குமார் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வீரர் டேனியல் பெத்தேலை எதிர்கொண்ட நிதேஷ் குமார் 21-14, 18-21, 23-21 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் கைப்பற்றினார். ஒரு சோகமான ரயில் விபத்தில் சிக்கிய நிதேஷ் குமார் கிரிக்கெட் ஜாம்பவான் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஃபிட்னெஸூக்கு முன்னுதாரணமாக விளங்கக் கூடிய விராட் கோலியின் உறுதி மற்றும் ஊக்கத்தால் சிறப்பான பயணத்தை மேற்கொண்டு இன்று தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனைக்கு தன்னை அர்ப்பணித்திருக்கிறார்.
Paris Paralympics: பேட்மிண்டனில் இந்திய வீரர் நிதேஷ் குமார் தங்கம் வென்று அசத்தல்
கடந்த 2009 ஆம் ஆண்டு நிதிஷ் குமார் 15 வயதாக இருந்த போது விசாகப்பட்டினத்தில் ரயில் விபத்தில் தனது வலது காலை இழந்துள்ளார். இதனால் அவர் பல மாதங்களாக படுத்த படுக்கையாக இருந்தார். இந்த ரயில் விபத்து சம்பவத்திற்கு பிறகு பேட்மிண்டன் வீரராக வர வேண்டும் என்ற தனது கனவை கைவிட்டிருக்கலாம்.
ஆனால், அதுவே அவரை ஊக்கப்படுத்தியது. தனது இயலாமையை எதிர்த்து போராடி உறுதியுடன் தனது தடகள இலக்கில் கவனம் செலுத்தினார். இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) மண்டியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படிக்கத் தொடங்கியபோது பேட்மிண்டன் மீது ஆர்வம் கொண்டார். அதன்பிறகு புனேவில் உள்ள செயற்கை மூட்டு மையத்திற்குச் சென்ற அவர், அங்கு கைகால்களை இழந்த வீரர்கள், தங்களை எவ்வாறு தயார்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைக் கண்டார்.
இதையடுத்து, 2016 இல் அவர் பாரா தேசிய சாம்பியன்ஷிப்பில் ஹரியானா அணியில் இடம் பெற்றார். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியிடம், நிதேஷ் குமார் உத்வேகத்தைக் காண்கிறார். கோலியின் சிறப்பான அர்ப்பணிப்பு, சவால்களை எதிர்கொள்ளும் திறன் மற்றும் அவரது நேர்மறையான மனநிலை ஆகியவற்றை கண்டு அவர் வியந்து பாராட்டுகிறார். நிதேஷ் குமாரின் ரோல் மாடலாக திகழும் விராட் கோலி அவரை மேன்மைக்காக தூண்டினார்.
இது குறித்து நிதேஷ் குமார் கூறியிருப்பதாவது- விராட் கோலியை நான் மனதார பாராட்டுகிறேன். ஏனென்றால், அவர் தன்னை முழுமையான விளையாட்டு வீரராக மாற்றிக் கொண்ட விதம், 2013 ஆம் ஆண்டு முன்பு எப்படி இருந்தாரோ அப்படியே ஃபிட்டாகவும் ஒழுக்கமாகவும் இப்போதும் இருக்கிறார். மேலும், கடற்படை அதிகாரியின் மகனான நிதேஷ் குமார் ஒரு முறை சீருடை அணிய ஆசைப்பட்டதாக கூறியுள்ளார்.
பாராலிம்பிக்ஸில் ஆடவர் ஒற்றையர் SL3 பிரிவில் பதக்கங்களை வென்ற நிதேஷ் குமாரின் வெற்றி இந்திய பேட்மிண்டனுக்கு குறிப்பிடத்தக்க சாதனையாகும். அவர் விளையாட்டில் மட்டுமின்றி கல்வியிலும் சாதித்துள்ளார். அவர் ஐஐடி மண்டியில் பட்டம் பெற்றார். தற்போது ஹரியானாவில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத் துறையில் சீனியர் பேட்மிண்டன் பயிற்சியாளராக உள்ளார். அவர் தனது ஓய்வு நேரத்தில் இசையைக் கேட்பது, வாகனம் ஓட்டுவது மற்றும் விளையாட்டுகளைப் பார்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.