இந்திய அணியில் ரிஷப் பண்ட்டிற்கான வாய்ப்பு குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கடந்த 2014ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அனுபவமிக்க வீரரான தோனியின் ஓய்விற்கு பிறகு விக்கெட் கீப்பிங்கில் அவரது இடத்தை பூர்த்தி செய்யமுடியாமல் இந்திய அணி தற்போது வரை திணறிவருகிறது. 

ரித்திமான் சஹா, தினேஷ் கார்த்திக், பார்த்திவ் படேல் போன்றோரை இந்திய அணி முயற்சி செய்துவிட்டது. சஹாதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங்கில் முதல் சாய்ஸாக இருந்துவருகிறார். அவர் காயத்தால் அவதிப்பட்டு வருவதால், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பார்த்திவ் படேல் அணியில் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தினேஷ் கார்த்திக் இறக்கப்பட்டார். அவர் சரியாக ஆடாததால், அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார். 

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் ரிஷப் பண்ட் தான் களமிறக்கப்பட்டார். பைஸ் மூலம் அதிகமான ரன்களை விட்டுக்கொடுத்தாலும் சிறப்பாகவே கீப்பிங் செய்தார். 

இந்நிலையில், பெங்களூரு வந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்ட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரிஷப் பண்ட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கில்கிறிஸ்ட், தோனியின் இடத்தை பூர்த்தி செய்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ரிஷப் பண்ட் மிகச்சிறந்த வீரர்.

எனவே அவருக்கு போதிய வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். வீரர்களை சேர்ப்பதும் நீக்குவதுமாக இருந்தால் அவர்கள் மனதளவில் பலவீனமடைந்துவிடுவார்கள். ஆஸ்திரேலிய அணியில் ஷேன் வார்னே சென்றதும் ஒரு வெற்றிடம் உருவானது. அது இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை. அதேபோலத்தான் மிகச்சிறந்த வீரர்கள் ஓய்வு பெற்றதும் வெற்றிடம் உருவாகும். அதுதான் தோனியின் ஓய்விற்கு பிறகும் உருவாகியுள்ளது. ரிஷப் பண்ட் விஷயத்தில் அவசரப்படாமல் போதிய அவகாசமும் வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்று கில்கிறிஸ்ட் தெரிவித்தார்.