Gift Announcement for Medal Winners in World Women World Boxing Competition

உலக மகளிர் இளையோர் குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு தலா ரூ.6.70 இலட்சமும், வெண்கலம் வென்றவர்களுக்கு தலா ரூ.2 இலட்சமும் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் அறிவித்துள்ளார்.

உலக மகளிர் இளையோர் குத்துச்சண்டைப் போட்டி குவாஹாட்டியில் சமீபத்தில் நிறைவடைந்தது. அந்தப் போட்டியில் இந்தியாவின் அங்குஷிதா போரோ, ஜோதி, சாக்ஷி, ஷஷி சோப்ரா, நீது ஆகியோர் தங்கமும், அனுபமா, நேஹா யாதவ் ஆகியோர் வெள்ளியும் வென்றனர்.

இந்த நிலையில், இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் சார்பில் அவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டபோது அவர்களுக்கான ரொக்கப் பரிசை அமைச்சர் ரத்தோர் அறிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

"பெண்கள் ஒரு சில போட்டிகளில் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற பழைய நம்பிக்கையை நமது வீராங்கனைகள் மாற்றியுள்ளனர். எவரும் எந்தப் போட்டியிலும் பங்கேற்று வெற்றி பெற முடியும் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்.

இந்த வெற்றிக்காக விளையாடும்போதும், பயிற்சி பெறும்போதும் அவர்கள் எவ்வளவு பிரச்சனைகளை எதிர்கொண்டிருப்பார்கள் என்பதை அறிய முடிகிறது. அதுவே இந்நாட்டின் பெண்களுக்கான ஒரு முன்னுதாரணமாகும். இவர்களின் வாழ்கைக் கதைகளால் ஈர்க்கப்பட்டு, அவர்களும் விளையாட முன்வர வேண்டும்.

இதனிடையே, ஒவ்வொரு விளையாட்டுக்குமான தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) மற்றும் உயர் செயல்பாட்டு மேலாளர்களை நியமிக்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அவர்கள், சம்பந்தப்பட்ட விளையாட்டில் இருக்கும் வீரர்களுக்கு சரியான பயிற்சி கிடைப்பதை உறுதி செய்வார்கள்.

அத்துடன் எந்தெந்தப் போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென அறிவுறுத்துவார்கள். மேலும், அவர்களுக்கான தொழில்நுட்ப மற்றும் மருத்துவ உதவிகளையும் கவனிப்பார்கள்" என்று ரத்தோர் கூறினார்.

உலக மகளிர் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற வீராங்கனைகளுக்கு தலா ரூ.2 இலட்சமும், வெண்கலம் வென்ற வீராங்கனைகளுக்கு தலா ரூ.20 ஆயிரமும் இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் பரிசாக வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.