சென்னை அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார் கெய்ல். அவரது மொத்த கோபத்தையும் சென்னை அணியிடம் காட்டினார் என்றே கூற வேண்டும்.

இந்த ஐபிஎல் தொடருக்கான ஏலம் பெங்களூருவில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. அந்த ஏலத்தின்போது, பெங்களூரு அணியில் ஆடிவந்த அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் புறக்கணிக்கப்பட்டார். இரண்டாவது ஏலத்தின்போதும் அவரது அடிப்படை விலையான 2 கோடிக்கே எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை.

மூன்றாவது ஏலத்தின்போது, பஞ்சாப் அணியின் ஆலோசகர் சேவாக், கிறிஸ் கெய்லை எடுத்தார். சர்வதேச கிரிக்கெட்டின் அதிரடி வீரரும், இதுவரையிலான ஐபிஎல் வரலாற்றில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரருமான கெய்லை, அடிப்படை விலைக்கே எந்த அணியும் எடுக்கவில்லை. அது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இறுதியில் பஞ்சாப் அணி, அடிப்படை விலையான 2 கோடிக்கு கெய்லை எடுத்தது.

ஏலத்தின் போது, தான் புறக்கணிக்கப்பட்ட சம்பவம் கெய்லுக்கு கண்டிப்பாக மிகப்பெரிய மன வருத்தத்தையும், கோபத்தையும் கொடுத்திருக்கும். அதன் விளைவுதான், சென்னை அணிக்கு எதிரான அதிரடி என்றுகூட கூறலாம்.

கெய்லை பஞ்சாப் அணி எடுத்தபோதும், முதல் இரண்டு போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. நேற்றைய சென்னைக்கு எதிரான போட்டியில் மார்கஸ் ஸ்டோய்னிஸை நீக்கிவிட்டு கெய்லை களமிறக்கினார் அஸ்வின்.

கேப்டன் அஸ்வினின் நம்பிக்கயை வீணடிக்காமல், முதல் போட்டியிலேயே தனது பணியை செவ்வனே செய்தார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கெய்ல், ஆரம்பத்தில் நிதானமாக ஆடினார். பின்னர் அதிரடியாக ஆடி, 33 பந்துகளில் 63 ரன்களை குவித்தார்.

இதற்கு முன்னதாக 3 முறை ஹர்பஜன் சிங்கின் பந்துவீச்சில் கெய்ல் அவுட்டாகியுள்ளார். எனவே ஹர்பஜனை வைத்து கெய்லை சாய்க்க திட்டமிட்ட தோனி, இரண்டாவது ஓவரையே ஹர்பஜனிடம் கொடுத்தார். ஆனால், அந்த ஓவரை மிகவும் கவனமாகவே கையாண்டார் கெய்ல். ஹர்பஜனின் அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து அதிரடியை தொடங்கிய கெய்ல், பிறகு அவுட்டாகும் வரை அதிரடியாகவே ஆடி மிரட்டினார்.

தன்னை அடிப்படை விலைக்குக்கூட ஏலத்தில் எடுக்க முன்வராத அணிகளுக்கு, தனது திறமையை அதிரடி ஆட்டத்தின் மூலம் எடுத்துரைத்தார் கெய்ல். கெய்லின் அதிரடி தொடரும் என ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.