மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் அரையிறுதியில் தோற்று இந்திய அணி வெளியேறியது. இந்த தொடரின் லீக் சுற்றில் பாகிஸ்தான்  மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து இரண்டு அரைசதங்களை விளாசி அணியை வெற்றி பெறச்செய்த முன்னாள் கேப்டனும் மூத்த வீராங்கனையுமான மிதாலி ராஜ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் காயம் காரணமாக உட்காரவைக்கப்பட்டார். 

அதன்பிறகு இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியிலும் மிதாலி ராஜ் அணியில் சேர்க்கப்படாமல் உட்கார வைக்கப்பட்டார். நல்ல ஃபார்மில் இருந்து ரன்களை குவித்துவரும் மிதாலி ராஜை முக்கியமான போட்டியில் அணியில் சேர்க்காமல் ஓரங்கட்டியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறியதால், மிதாலி ராஜ் நீக்கப்பட்ட விவகாரம் பெரிதாக வெடித்தது.

மிதாலி ராஜின் சர்ச்சைக்குரிய நீக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்,  மிதாலிக்காக மிகவும் வருத்தப்படுகிறேன். 20 ஆண்டுகளாக இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்கு மிதாலி ராஜ் மிகச்சிறந்த சேவையாற்றியிருக்கிறார். அவர் நல்ல ஃபார்மில் ஆடி, டி20 உலக கோப்பையில் இருமுறை ஆட்டநாயகி விருதை வென்றார். அவர் காயமடைந்திருந்தாலும் அடுத்த போட்டிக்கு உடற்தகுதி பெற்றுவிட்டார். எனினும் நாக் அவுட் சுற்றில் அவரை நீக்கியது ரொம்ப மோசமான முடிவு. இதே விராட் கோலி ஒரு போட்டியில் காயமடைந்து, நாக் அவுட் சுற்று போட்டிக்குள் உடற்தகுதி பெற்றிருந்தால் கோலியை உட்கார வைத்திருப்பீர்களா? உட்கார வைக்கத்தான் முடியுமா..? நாக் அவுட் சுற்றுகளில் மிகச்சிறந்த வீரர்களுடன் களமிறங்குவதுதான் சிறந்தது. அதுவும் மிதாலி ராஜ் போன்ற அனுபவம் வாய்ந்த வீரரை உட்கார வைத்தது கடினமான முடிவு என்று கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார்.