உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பை அணி மற்றும் பேட்டிங் ஆர்டர்கள் குறித்த விவாதங்கள் வலுத்துவருகின்றன. 

உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட அணியில் 13 வீரர்கள் உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. பரிசீலினை பட்டியலில் இருக்கும் எஞ்சிய 2 வீரர்கள் ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு உறுதிப்படுத்தப்படுவார்கள். பேட்டிங் ஆர்டரை பொறுத்தமட்டில் மாற்று தொடக்க வீரராக ராகுல் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். 

நான்காம் வரிசையில் நீண்ட தேடுதல் படலத்திற்கு பிறகு ராயுடு உறுதி செய்யப்பட்டிருந்தாலும், தோனியை நான்காம் வரிசையில் இறக்கலாம் என்ற குரல்களும் எழுந்தன. தோனி - ராயுடு ஆகிய இருவரில் யாரை 4ம் வரிசையில் இறக்கலாம் என்ற விவாதங்கள் நடந்துவந்த நிலையில், தேவைப்பட்டால் கோலியே நான்காம் வரிசையில் இறக்கப்படுவார் என்ற கருத்தை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெளிப்படுத்தியிருந்தார். 

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர், உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி. அவரை சூழலுக்கு ஏற்றவாறு நான்காம் வரிசையிலும் களமிறக்கலாம். உலக கோப்பை நடக்க உள்ள இங்கிலாந்தில் பந்துகள் நன்றாக ஸ்விங் ஆவதோடு காற்றிலேயே நகரும். எனவே 350 ரன்கள் போன்ற கடின இலக்கை விரட்டும்போது, ஒருவேளை முதல் விக்கெட்டை விரைவில் இழக்க நேரிட்டால், வேறு வீரரை மூன்றாம் வரிசையில் இறக்கிவிட்டு, உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலியை நான்காம் வரிசையில் இறக்கலாம். ஆனால் சூழல் அப்படியில்லை என்றால், கோலி வழக்கம்போலவே மூன்றாம் வரிசையிலேயே இறங்கலாம் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.