உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்து வருவது, ஒரு அணியாக இந்திய வீரர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. 

ரோஹித், தவான், கோலி என இந்திய அணியின் டாப் ஆர்டர்கள் மிக வலுவாக உள்ளது. புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, குல்தீப், சாஹல் என பவுலிங் யூனிட்டும் பயங்கர மிரட்டலாக உள்ளது. இந்திய அணியின் பிரச்னையாக இருந்துவந்த மிடில் ஆர்டருக்கு ராயுடு, கேதர் ஜாதவ் மூலம் தீர்வு காணப்பட்ட திருப்தியில் இந்திய அணி உள்ளது. உலக கோப்பைக்கான இந்திய அணி பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டு விட்டது. ஒருசில வீரர்கள் மட்டும் கடைசி நேரத்தில் அணிக்குள் நுழைய வாய்ப்புள்ளது. ரிஷப் பண்ட் அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல ஆல்ரவுண்டர்களை பொறுத்தமட்டில் ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, விஜய் சங்கர், கேதர் ஜாதவ் ஆகியோர் உள்ளனர். ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் முதன்மை ஆல்ரவுண்டர் தேர்வு. ஜடேஜா அல்லது கேதர் ஜாதவ் ஆகிய இருவரில் ஒருவர் ஸ்பின் ஆல்ரவுண்டராக ஆடும் லெவனில் இடம்பெறுவார். ஆனால் ஜடேஜா, கேதர் ஆகிய இருவருமே உலக கோப்பையில் ஆட அழைத்து செல்லப்பட வாய்ப்புள்ளது. 

விஜய் சங்கரும் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இக்கட்டான சூழலில் சிறப்பாக பேட்டிங் ஆடி கவனத்தை ஈர்த்துள்ளார். வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அவரும் பரிசீலிக்கப்பட வாய்ப்புள்ளது. ஹர்திக் பாண்டியா ஏற்கனவே இருக்கும்பட்சத்தில் விஜய் சங்கர் அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு எந்தளவிற்கு இருக்கும் என்பது தெரியவில்லை. 

இருவரையுமே உலக கோப்பைக்கு அழைத்து செல்லலாம் என்பதே கவாஸ்கரின் கருத்து. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர், உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பதால் அங்கு கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் இருப்பது நல்லது. விஜய் சங்கர் நல்ல ஆல்ரவுண்டர், நல்ல ஃபீல்டரும் கூட. நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தனது பொறுப்பான பேட்டிங்கின் மூலம் இந்திய அணியை இக்கட்டான சூழலில் இருந்து மீட்டெடுத்தார். ஆட்டத்தின் போக்கை சரியாக புரிந்துகொண்டு ஆடுகிறார். சூழலையும் ஆட்டத்தின் போக்கையும் புரிந்துகொண்டு ஆடும் வீரரை அணியில் வைத்திருக்க வேண்டும். அந்த வகையில் உலக கோப்பைக்கான அணியில் விஜய் சங்கரையும் பரிசீலிக்க வேண்டும் என்று கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.