முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு, அஷ்வின் செய்த செயலுக்கு கவாஸ்கர் மற்றும் சஞ்சய் மஞ்சரேக்கர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றியை பெற்று மீண்டெழுந்துள்ளது. 

முதல் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணியின் அனுபவ ஸ்பின் பவுலர் அஷ்வின், அடுத்த இரண்டு போட்டிகளில் 41 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார். இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் அஷ்வினின் பந்துவீச்சு எடுபடவில்லை. முதல் போட்டியில் அஷ்வினின் பவுலிங்கை எதிர்கொள்ள திணறிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், அடுத்த இரண்டு போட்டிகளிலும் நிதானமாக எதிர்கொண்டு தெளிவாக ஆடினர்.

அதற்கான காரணம் குறித்தும் அதை செய்ததற்கு அஷ்வின் மீது அதிருப்தியும் தெரிவித்துள்ளனர், முன்னாள் வீரர்கள் கவாஸ்கர் மற்றும் சஞ்சய் மஞ்சரேக்கர். 

முதல் டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு அஷ்வினிடம் முன்னாள் வீரர் இயன் வார்ட் பேட்டி எடுத்தார். அப்போது, நாசூக்காக அஷ்வினிடம் பந்தை கொடுத்து அவரது உத்தி குறித்து கேட்டார். அதற்கு சற்றும் யோசிக்காத அஷ்வின், தனது உத்தி, பந்துவீசும் முறை, குறிப்பிட்ட டெலிவரிகளை அவர் எப்படி வீசுகிறார் என்ற ஆக்‌ஷன் ஆகியவற்றை செய்து காட்டினார். 

அதை பார்த்து இங்கிலாந்து வீரர்கள், அஷ்வினின் பவுலிங்கை எப்படி சமாளிப்பது என்று கண்டிப்பாக திட்டம் வகுத்திருப்பார்கள். அப்படித்தான் அவரது பந்தை சமாளித்து ஆடிவிட்டனர். 4 போட்டிகள் எஞ்சியிருந்த நிலையில், தனது பவுலிங் உத்தியை அஷ்வின் தெரிவித்தது அவரையும் அணியையும் பாதிக்கும் செயல். மேஜிக் நிபுணர் ஒருவர், தனது உத்தியை ரசிகர்களிடம் வெளிப்படையாக கூறுவது போன்றது, அஷ்வின் செய்த செயல் என கவாஸ்கரும் மஞ்சரேக்கரும் அஷ்வினின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர். 

இரண்டு போட்டிகளில் 41 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டை மட்டுமே அஷ்வினால் எடுக்க முடிந்தது. வாயைக் கொடுத்து இப்படி மாட்டிட்டீங்களே அஷ்வின்..?