ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கான அணி தேர்வு குறித்து கங்குலி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் இதுவரை ஒருமுறை கூட இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை. ஆனால் அதற்கான வாய்ப்பு தற்போது பிரகாசமாக உள்ளது. கோலி தலைமையிலான இந்திய அணி வரலாற்று டெஸ்ட் வெற்றியை பதிவு செய்ய அருமையான வாய்ப்பு. இதுவரை நடந்து முடிந்துள்ள 3 போட்டிகளில் 2-1 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. 

இந்நிலையில், கடைசி போட்டி சிட்னியில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியிலும் இந்திய அணி சிறப்பாக பேட்டிங் ஆடிவருகிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்களை குவித்துள்ளது. 

ரோஹித் சர்மாவிற்கு குழந்தை பிறந்துள்ளதால், அவர் நாடு திரும்பிவிட்டார். எனவே கடந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஹனுமா விஹாரி 6ம் வரிசையில் களமிறக்கப்பட வேண்டும். எனவே மயன்க்குடன் இறங்க தொடக்க வீரர் தேவை என்பதால் மூன்றாவது போட்டியில் அணியிலிருந்து நீக்கப்பட்ட ராகுல் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். அதேபோல இஷாந்த் சர்மா காயமடைந்ததால் அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டார். உமேஷுக்கு பதிலாக புவனேஷ்வர் குமாரை சேர்த்திருக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருந்தது. மேலும் காயத்திலிருந்து மீண்டு முழு உடற்தகுதியுடன் இருக்கும் ஹர்திக் பாண்டியாவிற்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் முழு உடற்தகுதி பெறாத அஷ்வின் பெயர் 13 வீரர்களை கொண்ட பெயர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. 

இந்நிலையில், இந்த அணி குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சிறப்பான பங்களிப்பை அளிக்க வல்ல ஹர்திக் பாண்டியாவை அணியில் சேர்க்காதது எனக்கு வியப்பாக இருந்தது. அதேபோல இஷாந்த் சர்மா உடற்தகுதியுடன் இல்லாவிட்டால், அவருக்கு பதிலாக புவனேஷ்வர் குமாரை சேர்த்திருக்கலாம். ஆனால் புவனேஷ்வர் குமார் புறக்கணிக்கப்பட்டதும் எனக்கு வியப்பைத்தான் ஏற்படுத்தியது என்று கங்குலி தெரிவித்துள்ளார்.