இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, தனது கிரிக்கெட் அனுபவத்தை சுயசரிதையாக எழுதியுள்ளார். அதில் பல சுவாரஸ்யமான சம்பவங்களை குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் இதுவரை வெளிவராத பல தகவல்களையும் பதிவிட்டுள்ளார் கங்குலி.

அந்த சுயசரிதையில், 2003ம் ஆண்டு  உலக கோப்பையின் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான லீக் போட்டி தொடர்பான சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். 

இதுதொடர்பாக சுயசரிதையில் கங்குலி எழுதியுள்ளதாவது: 

இந்தியா பாகிஸ்தான் இடையேயான அந்த போட்டி, அடுத்தகட்ட சுற்றுக்கான எதையும் நிர்ணயம் செய்யும் போட்டி அல்ல. அந்த போட்டிக்கு முன்னரே இந்தியா, அடுத்த சுற்றுக்கு தகுதியாகிவிட்டது. 

இப்படியான நிலையில், அந்த போட்டி நடந்தாலும் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி என்பதால் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் விளையாடினோம். இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான அணி சயீத் அன்வரின் அபாரமான சதத்தால் 7 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் குவித்தது.

மேலும், அந்த அணியில் வக்கார் யூனுஸ், வாசிம் அக்ரம், சோயிப் அக்தர் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களும், ஷாகித் அப்ரிதி, அப்துல் ரசாக் போன்ற பகுதிநேர பந்து வீச்சாளர்களும் இருந்ததால், மிகப் பெரிய சவால் எங்களுக்கு காத்திருந்தது. ஆதலால், நான் அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் தெளிவாக சில விஷயங்களைக் கூறினேன். அவசரப்பட்டு விக்கெட்டுகளை இழந்துவிடாத வகையில், நிதானமாக பேட் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டு இருந்தேன்.

அதிலும், குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கும் சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கரிடம் நிதானமாக பேட் செய்யுங்கள், விக்கெட்டுகளை இழந்து அடுத்து களமிறங்குபவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்திவிடாதீர்கள். 273 ரன்களை சேஸிங் செய்வது எளிதானது என்றாலும், வாசிம் அக்ரம், அக்தர், வக்கார் யூனிஸ் இருக்கும் அணியில் மிகக் கடினம் என்றேன். ஆதலால், தொடக்க ஆட்டம் ஸ்திரமாக நிதானமாக இருக்க வேண்டும் என்றேன்.

மேலும், இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு நன்கு ஒத்துழைக்கும் ஆடுகளம், இதில் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழக்காமல் 10 ஓவர்களை கடந்துவிட்டால், அதன்பின் அடித்து ஆடலாம் என்றும் இருவருக்கும் அறிவுறுத்தினேன்.

ஆனால், தொடக்கத்தில் இருந்து சச்சினும்,சேவாக்கும் அதிரடி ஆட்டத்தைப் பார்த்து மிரண்டுவிட்டேன். 5 ஓவர்களில் 50 ரன்களை எட்டிவிட்டது. வாசிம் அக்ரம் 3 ஓவர்கள் வீசி 21 ரன்கள் கொடுத்தார். வக்கார், சோயிப் அக்தர் முறையே 11, 18 ரன்கள் கொடுத்தனர்.

இதில் என்ன வேடிக்கைஎன்றால், கேப்டன் கூறிய எந்தவிதமான அறிவுரைகளையும் பின்பற்றாமல், சச்சினும், சேவாக்கும் பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்துவிட்டனர். இதைப் பார்க்கும் போது எனக்கு சிரிப்புதான் வந்தது. இவர்கள் இருவரும் அமைத்துக்கொடுத்த அடித்தளம் அதன்பின் களமிறங்கியவர்களுக்கு எளிதாக இருந்தது. இருவரையும் கேள்வி கேட்பதற்கு பதிலாக, நான் சிரித்துக்கொண்டேன். சச்சின் டெண்டுல்கர் 75 பந்துகளில் 98 ரன்கள் குவித்ததையும் மறக்க முடியாது.

யுவராஜ் சிங் அரை சதம், டிராவிட், முகமது கைப் ஆகியோரின் பொறுப்பான ஆட்டமும் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தது என சுயசரிதையில் நினைவுகளை பகிர்ந்துள்ளார் கங்குலி.