தோனி மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அவருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஆதரவாக பேசியுள்ளார் கவுதம் காம்பீர். 

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் அனுபவ வீரருமான தோனி தற்போது ஃபார்மில்லாமல் தவித்து வருகிறார். இங்கிலாந்து தொடர், ஆசிய கோப்பை ஆகியவற்றில் சோபிக்கவில்லை. அதனால் கடும் விமர்சனங்களை தோனி எதிர்கொண்டுவருகிறார். 

ஏற்கனவே இந்திய அணியில் மிடில் ஆர்டர் பிரச்னை நிலவிவரும் நிலையில், தோனி சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து சொதப்பிவருகிறார். உலக கோப்பைக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவாகவே உள்ளதால் தோனி மீண்டும் ஃபார்முக்கு வருவது அவசியம்.

தோனியின் பேட்டிங் மீது விமர்சனங்கள் எழும்போதெல்லாம் மீண்டும் சிறப்பாக ஆடி தனது பேட்டிங்கின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் தோனி. அதேபோன்றதொரு பதிலடியையும் இப்போதும் கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

தோனி பேட்டிங் சரியாக ஆடாவிட்டாலும் அவரது அனுபவம், அணிக்கு தேவை. கேப்டனுக்கு அவர் வழங்கும் ஆலோசனைகள் போட்டியின் திருப்புமுனைகளை ஏற்படுத்தும் தருணங்களை ஏற்படுத்தி கொடுக்கின்றன. எனவே பேட்டிங் சரியாக ஆடாவிட்டாலும் அனுபவ வீரர், இந்திய அணியின் வெற்றிகரமான அனுபவமான முன்னாள் கேப்டன் என்ற முறையில் 2019 உலக கோப்பை வரை தோனி ஆட வேண்டியது அவசியம். இதே கருத்தைத்தான் முன்னாள் வீரர்கள் பலரும் தெரிவித்துவருகின்றனர். 

இதற்கிடையே தோனிக்கு அடுத்து அவரது இடத்தை பிடிக்க இருக்கும் ரிஷப் பண்ட்டை நீண்டகாலம் காத்திருக்க வைக்காமல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரிலேயே அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன. 

இந்நிலையில், தோனி குறித்து பேசியுள்ள கவுதம் காம்பீர், எந்த வீரராக இருந்தாலும் அணியில் அவரது இடம், அவரது திறமையை பொறுத்தே அமைய வேண்டுமே தவிர வயதை பொறுத்து அல்ல. வயது மேட்டரே கிடையாது. எத்தனை வயதாக இருந்தாலும் அவர் திறமையாக ஆடினால் அணியில் இருக்கலாம். தோனியும் அப்படித்தான். நன்றாக ஆடினால் அணியில் தொடர்ந்து இடம்பெறலாம். தோனி சிறப்பாக ஆடி அவர் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பார் என நம்புவதாக காம்பீர் தெரிவித்துள்ளார். 

காம்பீரை ஓரங்கட்டியது தோனி தான் என்றாலும், எல்லா விஷயத்திலும் நேர்மையாக கருத்து தெரிவிக்கும் காம்பீர், தோனி விஷயத்திலும் அதேமாதிரியான கருத்தைத்தான் தெரிவித்துள்ளார். தன்னை ஓரங்கட்டியவர் என்பதற்காக தோனியை வேண்டுமென்றே விமர்சிக்காமல், அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.