இந்திய அணியின் முன்னாள் வீரரும் டெல்லி & டிஸ்டிரிக்ட்ஸ்(மாவட்டங்கள்) கிரிக்கெட் அசோஷியேனின் தேர்வுக்குழு உறுப்பினருமான அமித் பண்டாரியை மர்ம நபர்கள் தாறுமாறாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன்ஸ் மைதானத்தில் அண்டர் 23 வீரர்களுக்கு பயிற்சியளித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் அமித் பண்டாரியை தாறுமாறாக தாக்கினர். இதைக்கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அமித்தை தாக்கிவிட்டு அவர்கள் தப்பியோடினர்.

இந்த தாக்குதலில் தலை, காது மற்றும் கால் ஆகியவற்றில் பலத்த காயமடைந்த அமித் பண்டாரி பரமானந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அண்டர் 23 அணியில் புறக்கணிக்கப்பட்ட வீரர் அடியாட்களை வைத்து தாக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

இதுகுறித்து அந்த கிரிக்கெட் அசோஷியேஷனின் தலைவர் நேரடியாக டெல்லி மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்ததை அடுத்து, அமித் பண்டாரியை தாக்கியவர்களை போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.