Former and current Captains congrats Mithali Raj
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்டில் 6000 ஓட்டங்கள் குவித்து சாதனைப் படைத்ததற்கு முன்னாள் கேப்டன் சச்சின் மற்றும் இந்நாள் கேப்டன் வீராட் கோலி வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை போட்டியில் விளையாடி வரும் மிதாலி ராஜ், நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 41 ஓட்டங்கள் எடுத்தபோது மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 6000 ஓட்டங்க்ள் குவித்த முதல் வீராங்கனை என்ற சாதனையப் பெற்றார்.
ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரி பந்துவீச்சில் பவுண்டரியை விளாசி அதிக ஓட்டங்கள் குவித்தவர் என்ற சாதனையை எட்டிய மிதாலி ராஜ், கிர்ஸ்டன் பீம்ஸ் பந்துவீச்சில் சிக்ஸரை விளாசி 6000 ஓட்டங்கள் என்ற சாதனையை எட்டினார்.
இதுவரை 183 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள 35 வயதான மிதாலி ராஜ் 6028 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
பிசிசிஐ தலைவர் (பொறுப்பு) சி.கே.கன்னா வெளியிட்டுள்ள அறிக்கை:
“இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் மிகப்பெரிய சாதனையை செய்திருக்கிறார். அவருக்கு பிசிசிஐ சார்பில் வாழ்த்துகள். 1999-ல் அறிமுகப் போட்டியில் களமிறங்கியபோதே, அதில் சதமடித்து தனது திறமையை உலகிற்கு காட்டியவர் மிதாலி ராஜ். ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக அரை சதங்கள் விளாசியவர் என்ற சாதனையும் மிதாலி ராஜ் வசமேயுள்ளது' எனப் பாராட்டியுள்ளார்.
அதேபோன்று, மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 6 ஆயிரம் ஓட்டங்கள் குவித்த இந்திய கேப்டன் மிதாலி ராஜுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர், இந்நாள் கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சச்சின்:
'மிதாலிக்கு வாழ்த்துகள். மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்திருப்பது மிகப்பெரிய சாதனையாகும். இன்றைய உங்கள் ஆட்டம் சிறப்புமிக்கது' என குறிப்பிட்டுள்ளார்.
விராட் கோலி:
“மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து மிதாலி சாதனை படைத்திருப்பது இந்திய கிரிக்கெட்டுக்கு சிறப்புமிக்க தருணமாகும்' என குறிப்பிட்டுள்ளார்.
