1995 ரக்பி உலகக் கோப்பையை வென்ற முன்னாள் வீரர் ஹன்னஸ் ஸ்ட்ரைடோம் கார் விபத்தில் பலி!
ரக்பி உலகக் கோப்பை வென்ற ஸ்பிரிங்போக் அணியின் முன்னாள் வீரர் ஹன்னஸ் ஸ்ட்ரைடோம் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1965 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர் ஹன்னஸ் ஸ்ட்ரைடோம். இவர், கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் ரக்பி விளையாடி வந்தார். இதையடுத்து 1995 ஆம் ஆண்டு ஸ்பிரிங்போக் அணியில் இடம் பெற்றார். அந்த ஆண்டு நடந்த ரக்பி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பிரிங்போக் அணியில் இடம் பெற்று விளையாடினார். மேலும், சொந்த மண்ணில் நடந்த ரக்பி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பிரிங்போக் அணி முதல் முறையாக உலகக் கோப்பை வெல்ல முக்கிய காரணமாகவும் இருந்தார்.
இந்த நிலையில், ஹன்னஸ் கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 58. இது குறித்து அவரது மனைவி நிகோலி கூறிருப்பதாவது: பிரிட்டோரியாவிலிருந்து எமலாஹ்லேனி பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்த போது டாக்ஸி மீது விபத்து நடந்துள்ளதாகவும், அந்த விபத்தில் அவர் உயிரிழந்துள்ளார் என்றும் அவர் கூறியதாக தகவல் வெளியாகி வருகிறது.