ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக யாரை களமிறக்கலாம் என்று முன்னாள் வீரர் ஃபரோக் என்ஜினியர் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்திய டெஸ்ட் அணியில் தோனியின் ஓய்வுக்கு பிறகு விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக செயல்பட்டு வந்த ரித்திமான் சஹா, காயம் காரணமாக விலகியதை அடுத்து கிடைத்த வாய்ப்புகளை பார்த்திவ் படேலும் தினேஷ் கார்த்திக்கும் சரியாக பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டனர். 

இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் வாய்ப்பை பெற்ற இளம் வீரர் ரிஷப் பண்ட், சிக்ஸருடன் சர்வதேச ரன் கணக்கை தொடங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இங்கிலாந்துக்கு எதிராக ஒரு சதத்தையும் விளாசினார். அதன்பிறகு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராகவும் நன்றாக பேட்டிங் ஆடினார். 

பேட்டிங்கில் ஓரளவு சோபித்தாலும் விக்கெட் கீப்பிங்கில் ரிஷப் பண்ட் சொதப்பினார். ஒரு தொடரில் மட்டுமல்லாது தொடர்ந்து சொதப்பிவருவதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார் பார்த்திவ் படேல். டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங் மிக முக்கியம். விக்கெட் கீப்பிங்கில் சிறு தவறு செய்துவிட்டாலும் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அனுபவ விக்கெட் கீப்பரான பார்த்திவ் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

பார்த்திவ் படேல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், யார் களமிறக்கப்படுவார் என்பது பெரிய கேள்வியாக உள்ளது. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் ஃபரோக் என்ஜினியர், ரிஷப் பண்ட் களத்தில் நிலைத்து பந்துகளை கணிக்காமலேயே களத்திற்கு சென்றதும் அடித்து ஆட தொடங்கி விக்கெட்டை பறிகொடுக்கிறார். பார்த்திவ் படேல் 35 வயதிலும் நல்ல ஃபிட்டாகவே இருக்கிறார். எனவே விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் என்றால் என்னுடைய தேர்வு பார்த்திவ் படேல் தான். விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனை உருவாக்குவதற்கு பதிலாக பேட்ஸ்மேன் - விக்கெட் கீப்பரை உருவாக்கி கொண்டிருக்கிறோம். விக்கெட் கீப்பிங்கிற்குத்தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஒரு பேட்ஸ்மேனாக நிறைய ரன்களை குவித்துவிட்டு விக்கெட் கீப்பிங்கில் கேட்ச்சை விட்டால், 200 ரன்களை விட்டுக்கொடுத்ததற்கு சமம். விக்கெட் கீப்பர் முதலில் ஒரு விக்கெட் கீப்பராக இருக்க வேண்டும். எனவே ரிஷப் பண்ட்டை களமிறக்காமல் பார்த்திவ் படேலை இறக்குவதுதான் நல்லது என ஃபரோக் தெரிவித்துள்ளார்.