ஜடேஜா அபாயகரமான வீரர் என்றும் அவர் மிகவும் சிறப்பாக ஆடியதாகவும் இங்கிலாந்து அணியின் உதவி பயிற்சியாளர் பால் ஃபார்ப்ரேஸ் தெரிவித்துள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி ஏற்கனவே 3-1 என வென்றுவிட்ட நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியிலும் இங்கிலாந்தின் கையே ஓங்கியிருக்கிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 332 ரன்களும் இந்திய அணி 292 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 40 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து அணி, மூன்றாம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்துள்ளது. அலெஸ்டர் குக்கும் ஜோ ரூட்டும் களத்தில் உள்ளனர். 

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 292 என்ற ஓரளவிற்கு நல்ல ரன்னை எடுத்ததற்கு அறிமுக வீரர் விஹாரியும் ஜடேஜாவும் ஜோடி சேர்ந்து அணியை மீட்டெடுத்தனர். 160 ரன்களுக்கே இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பிறகு ஜோடி விஹாரி-ஜடேஜா ஜோடி, 7வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்தனர். 

ஆண்டர்சன், பிராட், ஸ்டோக்ஸ், அடில் ரஷீத், மொயின் அலி ஆகியோர் மாறி மாறி பந்துவீச அனைவரின் பவுலிங்கையும் பதம் பார்த்தது இந்த ஜோடி. அறிமுக போட்டியிலேயே அரைசதம் கடந்த ஹனுமா விஹாரி 56 ரன்களில் அவுட்டானார். அதன்பிறகு ஜடேஜாவுடன் இஷாந்த் சர்மா ஜோடி சேர்ந்தார்.  மூன்றாம் நாளான நேற்றைய உணவு இடைவேளை வரை இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்திருந்தது. உணவு இடைவேளை வரை 94 பந்துகளை எதிர்கொண்டு 41 ரன்கள் எடுத்திருந்தார் ஜடேஜா.

உணவு இடைவேளை முடிந்து வந்ததும் இஷாந்த் சர்மா அவுட்டானார். அவருக்கு பின்னாடியே ஷமியும் சென்றுவிட்டார். விக்கெட்டுகள் விழவும் அடித்து ஆடிய ஜடேஜா, ரன்களை முடிந்தளவிற்கு உயர்த்தினார். கடைசி விக்கெட்டுக்கு தன்னுடன் ஜோடி சேர்ந்த பும்ராவை முடிந்தவரை பேட்டிங் முனைக்கு வரவிடாமல் ஓவரின் கடைசி பந்தில் சிங்கிள் தட்டி அவரே ஆடிவந்தார். மொயின் அலி வீசிய 95வது ஓவரின் கடைசி பந்தில் சிங்கிள் தட்டினார் ஜடேஜா. அப்போது பும்ரா ரன் அவுட்டானதால், இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் முடிந்தது. 292 ரன்களுக்கு இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிந்தது. சிறப்பாக ஆடிய ஜடேஜா 86 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். முதல் நான்கு போட்டிகளில் ஆடாமல் கடைசி போட்டியில் அணியில் சேர்க்கப்பட்ட ஜடேஜா, கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஆடினார்.

கடந்த ஓராண்டாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆட ஜடேஜாவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் தொடரிலும் ஒரு ஸ்பின்னரை மட்டும் இறக்குவதால், அஷ்வினுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால் ஜடேஜாவிற்கு வாய்ப்பு இல்லாமலேயே இருந்து வந்தது. இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அருமையாக ஆடினார் ஜடேஜா. 

இந்நிலையில், ஜடேஜாவின் ஆட்டம் குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் உதவி பயிற்சியாளர் பால் ஃபார்ப்ரேஸ், ஜடேஜா ஒரு அபூர்வமான மற்றும் அபாயகரமான வீரர். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே சிறப்பாக செயல்படுகிறார். நல்ல வேளையாக அவர் எங்களுக்கு எதிரான முந்தைய போட்டிகளில் ஆடாமல் கடைசி போட்டியில் ஆடினார் என்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று ஜடேஜாவின் திறமையை கவுரவப்படுத்தும் விதமாக பேசினார்.