England defeated Australia by five wickets Retaliating ...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று ஆஷஸ் டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்ததற்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ளது.
இங்கிலாந்து அணி 5 டெஸ்ட், 5 ஒரு நாள் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இதில், வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 4-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
இந்த நிலையில், 5 ஒரு நாள் ஆட்டங்களைக் கொண்ட தொடரில், முதல் ஆட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மெல்போர்ன் நகரில் நடைபெற்றது.
இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 304 ஓட்டங்கள் குவித்தது.
அதிகபட்சமாக ஆரோன் ஃபின்ச் 107 ஓட்டங்கள் எடுத்திருந்தார். கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, மிட்செல் மார்ஷ் 50 ஓட்டங்கள், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 60 ஓட்டங்கள் ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்தின் லியம் பிலன்கெட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 305 என்ற இலக்கை எதிர்கொண்டு இங்கிலாந்து அணி விளையாடத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய், ஜோ ரூட் ஆகியோரின் அதிரடி ஆட்டம் காரணமாக 48.5 ஓவர்களில் 308 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து.
ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மார்கஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
மெர்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஒரு நாள் ஆட்டத்தில் இரண்டாவதாக விளையாடிய ஓர் அணி 305 என்ற இலக்கை கடந்து வெற்றி பெற்றது இதுவே முதல் முறை.
இதற்கு முன்பு, இந்த மைதானத்தில் அதிகபட்சமாக 296 ஓட்டங்களை இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா எட்டிப்பிடித்திருந்ததே சாதனையாக இருந்தது.
வரும் வெள்ளிக்கிழமை இவ்விரு அணிகளுக்கு இடையேயான் 2-வது ஒரு நாள் போட்டி பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது.
