- Home
- Sports
- Sports Cricket
- நியூசிலாந்திடம் மண்டியிட்ட இலங்கை.. டி20 உலகக்கோப்பையில் இருந்து அவுட்.. பாகிஸ்தானுக்கும் சிக்கல்!
நியூசிலாந்திடம் மண்டியிட்ட இலங்கை.. டி20 உலகக்கோப்பையில் இருந்து அவுட்.. பாகிஸ்தானுக்கும் சிக்கல்!
இந்த தோல்வியின் மூலம் இலங்கை அணி தொடரை விட்டு வெளியேறி விட்டது. பாகிஸ்தானும் இக்கட்டான நிலையில் தான் உள்ளது. அதே வேளையில் நியூசிலாந்து அணி ஏறக்குறைய அரையிறுதி சுற்றை உறுதி செய்து விட்டது.
இலங்கை அணி படுதோல்வி
டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த படுதோல்வியின் மூலம் இந்தியாவுடன் சேர்த்து போட்டியை நடத்தும் இலங்கை அணி பரிதாபமாக வெளியேறியுள்ளது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் அந்த அணி 12.1 ஓவர்களில் 84/6 என பரிவித்தது. ஆனால் கேப்டன் மிட்ச்செல் சாண்ட்னர் மற்றும் மெக்கான்சி ஜோடி 80 ரன்களுக்கு மேல் சேர்த்து அணியை சவாலான இலக்கு கொண்டு சென்றனர்.
சாண்ட்னர் 26 பந்தில் 4 சிக்சர்களுடன் 47 ரன்களும், மெக்கான்சி 31 ரன்களும் எடுத்தனர். ரச்சின் ரவீந்திரா 32 ரன்கள் எடுத்தார்.
ரச்சின் ரவீந்திரா கலக்கல்
பின்பு சவாலான இலக்கை நோக்கி பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான தோல்வியை தழுவியது. அந்த அணி வீரர்கள் கமிந்து மெண்டிஸ் (31 ரன்கள்), துனித் வெல்லாலகே (29) மற்றவர்கள் தவிர மற்ற அனைவரும் இரட்டை இலக்கம் தொடவில்லை.
நியூசிலாந்து தரப்பில் ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா ஸ்பின் பவுலிங்கில் கலக்கி 4 ஓவரில் 27 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். மேட் ஹென்றி 2 விக்கெட் வீழ்த்தினார். பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் கலக்கிய ரச்சின் ரவீந்திரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இலங்கை வெளியேற்றம்; பாகிஸ்தானுக்கும் சிக்கல்
இந்த தோல்வியின் மூலம் இலங்கை அணி தொடரை விட்டு வெளியேறி விட்டது. அதே வேளையில் நியூசிலாந்து அணி ஏறக்குறைய அரையிறுதி சுற்றை உறுதி செய்து விட்டது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் நியூசிலாந்து அணி செமி பைனல் சென்று விடும். ஒருவேளை அந்த போட்டியில் நெருங்கி வந்து தோற்றாலும் கவலையில்லை.
ஏனெனில் நியூசிலாந்தை விட ரன் ரேட்டில் மிகவும் பின் தங்கியுள்ள பாகிஸ்தான் இலங்கைக்கு எதிரான போட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்றால் தான் அரையிறுதி செல்ல முடியும். இலங்கைக்கு எதிராக திரில் வெற்றி பெற்றாலும் அல்லது தோல்வியுற்றாலும் பாகிஸ்தான் அணி வெளியேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

