இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகள் இடையேயான 2-வது கிரிக்கெட் போட்டி சமனில் முடிவடைந்தது. மேலும் 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை நியூஸிலாந்து அணி கைப்பற்றியது.

இங்கிலாந்து-நியூஸிலாந்து இடையே ஆன 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. 

இதில் முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்கெனவே நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி கிரைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்றது. 

அதன்படி, முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 307 ஓட்டங்களையும், நியூஸிலாந்து அணி 278 ஓட்டங்களையும் பெற்றிருந்தன.

இரண்டாவது இன்னிங்ஸில் 352 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து டிக்ளேர் செய்திருந்தது இங்கிலாந்து.  அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோவ் 101 ஓட்டங்களையும், மார்க் உட் 52 ஓட்டங்களையும் எடுத்தனர். 

நியூஸி தரப்பில் டிம் செளதி 6 விக்கெட்டுகளையும், டிரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இரண்டாவது இன்னிங்ஸில் நியூஸி அணி 256 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் கடைநிலை வீரர்களான ஐஷ் சோதி, நீல் வாக்னர் ஆகியோரின் பொறுமையான ஆட்டத்தால் போட்டி சமனில் முடிவடைந்தது. 

முதல் டெஸ்டை ஒரு இன்னிங்ஸ், 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூஸி அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியின் சிறந்த வீரராக டிம் செளதியும், தொடரின் சிறந்த வீரராக டிரென்ட் போல்ட்டும் தேர்வு செய்யப்பட்டனர்.

அதன்படி, இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகள் இடையே நடைபெற்ற 2-வது கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தாலும் 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை நியூஸிலாந்து அணி கைப்பற்றியது.