du plessis gave surprise to srh and williamson

ஹைதராபாத் அணிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த டுபிளெசிஸ், சென்னை அணியை இறுதி போட்டிக்கு அழைத்து சென்றார்.

ஐபிஎல் 11வது சீசன் விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டு ஆண்டுகால தடைக்கு பிறகு களமிறங்கிய சென்னை அணி, 7வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. 

பிளே ஆஃப் சுற்றுக்கு ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய 4 அணிகளும் தகுதி பெற்றன. முதல் தகுதி சுற்று போட்டியில் ஹைதராபாத் அணியும் சென்னை அணியும் நேற்று மோதின. இந்த போட்டியில் சென்னை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் டுபிளெசிஸ். இவர் ஹைதராபாத் அணிக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார் என்றுதான் கூற வேண்டும். இந்த சீசன் தொடங்கியதிலிருந்து வாட்சன், ராயுடு, தோனி ஆகிய மூவரும்தான் பேட்டிங்கில் நம்பிக்கை கொடுத்து வந்தனர். ரெய்னாவும் தன் பங்கிற்கு அவ்வப்போது ரன்களை குவித்தார். 

ஆனால் இந்த சீசனில் பிளே ஆஃபிற்கு முன்னதாக சென்னை ஆடிய 14 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே டுபிளெசிஸிற்கு அணியில் ஆட வாய்ப்பளிக்கப்பட்டது. அந்த 4 போட்டிகளிலுமே டுபிளெசிஸ் பெரிதாக சோபிக்கவில்லை. 4 போட்டிகளில் வெறும் 83 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார்.

டுபிளெசிஸை விட சாம் பில்லிங்ஸிற்குத்தான் அணியில் அதிக வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவரும் சரியாக ஆடவில்லை. அதனால், தகுதி சுற்று போட்டியில் அனுபவ வீரரான டுபிளெசிஸை தேர்வு செய்தார் தோனி. முதல் பேட்டிங்கில் வெறும் 139 ரன்களை மட்டுமே எடுத்த ஹைதராபாத் அணி, அந்த எளிய இலக்கைக்கூட சென்னை அணியை எளிதாக எட்டவிடவில்லை. 

பவுலிங்கில் வலுவான ஹைதராபாத் அணி, 119 ரன்கள் என்ற இலக்கை எட்டவிடாமல் மும்பை அணியையும் 133 ரன்களை எட்டவிடாமல் பஞ்சாப் அணியையும் வீழ்த்தி வெற்றி பெற்றது. அதேபோல் 147 ரன்கள் என்ற இலக்கை எட்டவிடாமல் பெங்களூரு அணியை தடுத்து வெற்றியை பறித்தது. இவ்வாறு எளிய இலக்குகளை கூட எட்டவிடாமல் தடுத்து பல வெற்றிகளை ஹைதராபாத் அணி குவித்தது. 

நேற்றும் அதேபோன்றதொரு சூழல் உருவானது. வாட்சன், ரெய்னா, ராயுடு, தோனி, பிராவோ, ஜடேஜா, ஹர்பஜன், சாஹர் ஆகிய 8 விக்கெட்டுகளையும் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து வீழ்த்திய ஹைதராபாத் அணி வெற்றியை நெருங்கியது. 

ஆனால் இந்த போட்டிக்கு முன்னதாக ஒரு போட்டியில் கூட சரியாக ஆடாத டுபிளெசிஸை வீழ்த்த தவறிவிட்டது. அவரும் தனது அனுபவத்தால் வெற்றியை சென்னைக்கு பரிசளித்துவிட்டார். வாட்சன், ராயுடு, தோனி, ரெய்னா ஆகியோருக்கு நல்ல வியூகங்களை ஹைதராபாத் அணி வைத்திருந்திருக்கும். ஆனால் ஃபார்மில் இல்லாத டுபிளெசிஸிற்கு வியூகம் வைத்திருக்கவில்லை போலும். மேலும் நேற்று டுபிளெசிஸ் ஆடுவாரா? பில்லிங்ஸ் ஆடுவாரா? என்பதை ஹைதராபாத் அணியால் உறுதி செய்திருக்க முடியாது. 

வழக்கம்போலவே 139 என்ற குறைந்த ரன்னை, சென்னை அணியை எட்டவிடாத அளவிற்கு வெற்றியை நெருங்கியது ஹைதராபாத். ஆனால் எந்த போட்டியிலும் ஆடாத டுபிளெசிஸ், நேற்று நிலைத்து ஆடி ஹைதராபாத் அணிக்கு சர்ப்ரைஸ் கொடுத்துவிட்டார். ஆக்ரோஷமில்லாமல், பதற்றப்படாமல், மிகவும் கூலான அணுகுமுறையுடன் பவுலர்களை திறம்பட கையாண்டு வெற்றிகளை குவித்த ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சனிற்கு டுபிளெசிஸ் நேற்று வில்லனாகிவிட்டார்.