dinesh karthik praised under nineteen coach rahul dravid

19 வயதுக்கு உட்பட்ட உலக கோப்பையை வென்ற வீரர்கள், திறமையும் அடக்கமும் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். இதன் பெருமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டையே சேரும் என கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்துவருகிறார். ராகுல் டிராவிட் பயிற்சியில் அண்மையில் ஜூனியர் உலககோப்பையை இந்திய அணி வென்றது. அந்த அணியில் ஆடிய பிரித்வி ஷா, கில், ஷிவம் மாவி உள்ளிட்ட வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டு, இந்த ஐபிஎல் தொடரில் ஆடிவருகின்றனர்.

கொல்கத்தா அணியில், ஷுப்மன் கில், ஷிவம் மாவி ஆகிய இருவரும் இருக்கின்றனர். இருவரும் சிறப்பாகவே ஆடிவருகின்றனர். டெல்லி அணியில் இடம்பெற்றுள்ள ஜூனியர் அணியின் கேப்டன் பிரித்வி ஷா, தனது அபார பேட்டிங்கால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

பெங்களூருவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. போட்டிக்கு பின்னர் பேசிய கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் இளம் வீரர்களை புகழ்ந்து தள்ளினார். அவர்களை உருவாக்கிய ராகுல் டிராவிட்டையும் புகழ்ந்தார்.

போட்டிக்கு பின்னர் பேசிய தினேஷ் கார்த்திக், அணியில் உள்ள அனைத்து வீரர்களையும் நம்புபவன் நான். இளம் வீரர்கள் கிரேட். அவர்கள் இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பையை வென்றதற்கு பிறகு, சில வீரர்களின் நடவடிக்கையில் அணுகுமுறையிலும் மாற்றம் ஏற்படும். சற்று திமிரான தொனி தென்படும். ஆனால் இவர்கள் அப்படிப்பட்டவர்களாக இல்லை. அதற்கு காரணம் அவர்களுக்கு பயிற்சியளித்த ராகுல் டிராவிட். இவர்களின் திறமை, அடக்கம் ஆகிய அனைத்திற்குமான டிராவிட் தான் காரணம். எல்லா கிரெடிட்டும் டிராவிட்டுக்கே சேரும். இவர்கள்(கில், மாவி) எப்போதும் டிராவிட்டை பற்றி ஏதாவது சொல்லிக்கொண்டேயிருப்பார்கள். டிராவிட்டை போன்ற ஒருவர் ஜூனியர் அணிக்கு பயிற்சியாளராக இருப்பதால், சிறந்த இளம் வீரர்களை உருவாக்க முடியும் என தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.