ஐபிஎல் 11வது சீசன் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதற்கான ஏலம் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. 

சென்னை, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு நிரந்தர கேப்டன்கள் உள்ளனர். பஞ்சாப், கொல்கத்தா, டெல்லி ஆகிய அணிகள் புதிதாக பல வீரர்களை எடுத்ததால் கேப்டன்சி மாறுகிறது.

சென்னை அணிக்காக ஆடிவந்த ஸ்பின் பவுலர் அஸ்வினை பஞ்சாப் அணி எடுத்தது. பஞ்சாப் அணியில் சீனியர் வீரரான யுவராஜ் சிங் இருந்தபோதிலும், அஸ்வின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அதேபோல, இதுவரை கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்ட கவுதம் காம்பீரை இந்த முறை கொல்கத்தா அணி தக்கவைத்து கொள்ளவில்லை. காம்பீரை டெல்லி அணி எடுத்தது. அதனால் கொல்கத்தா அணிக்கு யார் கேப்டன் என்பது இழுபறியில் இருந்தது. ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின் கேப்டனாக செயல்பட விருப்பம் தெரிவித்திருந்தார். அவர் கேப்டனாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது.

இதையடுத்து கேப்டனாக யாரை நியமிப்பது என புரியாமல் தவித்த கொல்கத்தா அணி நிர்வாகம், ரசிகர்களின் ஆலோசனையை கேட்டது. அதில் பெரும்பாலான ரசிகர்கள், தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக்கையே கேப்டனாக போடுமாறு கூறினர். இதையடுத்து தினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினேஷ் கார்த்திக்கை 7.4 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணி, ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஐபிஎல்-லில் இரண்டு தமிழக வீரர்கள் கேப்டன்களாக செயல்படுகின்றனர். பஞ்சாப் அணிக்கு அஸ்வினும் கொல்கத்தா அணிக்கு தினேஷ் கார்த்திக்கும் கேப்டன்களாக செயல்படுகின்றனர்.