பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டது தொடர்பாக பொதுவெளியில் பேசப்படும் தகவல் குறித்து இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா விளக்கமளித்துள்ளார். 

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, கடந்த 2010ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டார். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை சானியா மிர்ஸா திருமணம் செய்துகொண்டது அந்த சமயத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. 

திருமணத்திற்கு பிறகும் சானியா மிர்ஸா தொடர்ந்து நாட்டுக்காக டென்னிஸ் ஆடிவந்தார். அதேபோல பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர மற்றும் அனுபவ வீரரான ஷோயப் மாலிக்கும் தன் நாட்டு அணிக்காக ஆடிவருகிறார். 

8 ஆண்டுகளாக இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகின்றனர். தற்போது சானியா மிர்ஸா கர்ப்பமாக உள்ளார். அவருக்கு விரைவில் குழந்தை பிறக்க இருக்கிறது. இந்நிலையில், அண்மையில் சானியா மிர்ஸா அளித்த பேட்டி ஒன்றில், அவரது குழந்தை கிரிக்கெட்டராக ஆக வேண்டுமா? அல்லது டென்னிஸ் வீரராக ஆக வேண்டுமா? என்ற கேள்விக்கு தனது குழந்தை மருத்துவராக வேண்டும் என பதிலளித்துள்ளார்.

மேலும் தனது திருமணம் குறித்து பேசிய சானியா, இந்தியா - பாகிஸ்தான் இடையே நல்லுறவை ஏற்படுத்தத்தான் நான் ஷோயப்பை திருமணம் செய்துகொண்டதாக பேசப்படுகிறது. அது உண்மையல்ல. நான் அதற்காக அவரை திருமணம் செய்துகொள்ளவில்லை என தெரிவித்தார்.