இந்திய அணிக்கு மூன்று விதமான உலக கோப்பைகளையும் வென்று கொடுத்த கேப்டன் தோனி. டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து 2014ம் ஆண்டு ஓய்வு பெற்ற தோனி, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி அணியில் ஒரு வீரராக ஆடிவருகிறார்.

கூலான மற்றும் திறமையான கேப்டன்சி, அதிவேக ஸ்டம்பிங், சமயோசித ரன் அவுட்டுகள், அபாரமான கேட்ச்சுகள் ஆகியவற்றின் மூலமாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருக்கும் தோனி, கடந்த ஓராண்டாக பேட்டிங்கில் ஃபார்மில் இல்லாமல் தவித்துவந்தார். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஹாட்ரிக் அரைசதம் அடித்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பி மிரட்டலான பேட்டிங் ஆடிவருகிறார். 

உலகம் முழுதும் ஏராளமான வெறித்தனமான ரசிகர்களை பெற்றுள்ளார் தோனி. அதனால் அவ்வப்போது சில ரசிகர்கள், அவர் மீதான மதிப்பில் மைதானத்துக்குள் ஓடிவந்து அவரது காலில் விழுந்துவிடுவார்கள். இதுமாதிரியான சம்பவங்கள் பலமுறை நடந்துள்ளன. 

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியிலும் அப்படியான ஒரு சம்பவம் நடந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவலர்களையும் மீறி மைதானத்துக்குள் புகுந்த ரசிகர் ஒருவர், விக்கெட் கீப்பிங் செய்துகொண்டிருந்த தோனியின் காலில் விழுந்தார். அந்த ரசிகர், கையில் இருந்த தேசிய கொடியுடன் ஓடிவந்து தோனியின் காலில் விழுந்ததால் தேசிய கொடி தரையில் பட்டது. உடனடியாக குனிந்து தேசிய கொடியை தூக்கினார் தோனி. தேசிய கொடியை கீழே பட்டுவிடக்கூடாது என்று விரைந்து தேசிய கொடியை கையில் தூக்கிய தோனியின் செயல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருவதோடு தோனியின் தேசிய பற்றை ரசிகர்கள் பாராட்டிவருகின்றனர்.