இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்திய அணிக்கு மூன்று விதமான சர்வதேச சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுகொடுத்தவர். அவர் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியதும் கோலி கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு, அண்மைக்காலமாக அதிரடியாக ஆடுவதில்லை. கடந்த காலங்களில் விளையாடியதுபோல தோனி அதிரடியாக ஆடுவதில்லை. அதனால் அவரது வயதை காரணம் காட்டி விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

36 வயதைக் கடந்துவிட்ட தோனி, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவது நல்லது என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. ஆனால், அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பைக்கு தோனியின் அனுபவ அறிவு தேவை. அதனால் அடுத்த உலக கோப்பையுடன் தோனி ஓய்வுபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஐபிஎல் 11வது சீசனில் இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு மீண்டும் சென்னை அணி தோனி தலைமையில் களம் கண்டுள்ளது. மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளை வீழ்த்திய சென்னை அணி, நேற்று பஞ்சாபுடன் மோதியது.

198 என்ற கடின இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் சோபிக்காததால், தோனியின் தலையில் பொறுப்பு இறங்கியது. ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய தோனி, இறுதி ஓவர்களில் சிக்ஸர்களாக பறக்கவிட்டார். தன் மீதான விமர்சனங்களுக்கு பேட்டிங்கால் பதிலடி கொடுத்தார் தோனி. வயதைக் காரணம் காட்டி விமர்சிப்பவர்களுக்கு தோனியின் அதிரடியே பதிலடி.

6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 44 பந்துகளில் 79 ரன்களை குவித்தார் தோனி. இந்த போட்டியில் போராடி பஞ்சாப்பிடம் தோல்வியுற்றாலும் தோனியின் அதிரடி, சென்னை ரசிகர்களுக்கு திருப்தியளித்தது.