dhoni opinion about future of csk
ஐபிஎல் 11வது சீசன் விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கிய தோனி தலைமையிலான சென்னை அணி, பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றுள்ளது. மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் சென்னை அணி உள்ளது.
ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றுள்ளன. சென்னையை போலவே இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு களமிறங்கிய ராஜஸ்தான் அணியும் பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றுள்ளது.
சென்னை அணியில் அதிகமான அனுபவ வீரர்கள் உள்ளனர். தோனி, வாட்சன், பிராவோ, ஹர்பஜன் சிங், டுபிளெசிஸ், ராயுடு ஆகியோர் அனுபவ வீரர்கள். அதேநேரத்தில் இவர்கள் அனைவருமே 30 வயதை கடந்தவர்கள். அதிலும் தோனி, வாட்சன், ஹர்பஜன் ஆகியோர் 35 வயதை கடந்தவர்கள். பிராவோவிற்கு 34 வயது.
வயது அதிகமான வீரர்களாக இருந்தாலும், இவர்கள் அனைவரும் அனுபவம் வாய்ந்த சீனியர் வீரர்கள் என்பதால், ஆட்டத்தின் சூழலை உணர்ந்து அதற்கேற்றவாறு ஆடி வெற்றியை பறித்துவிடுகின்றனர்.
இந்நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. அதன்பிறகு பேசிய சென்னை கேப்டன் தோனி, சூசகமாக சில கருத்துகளை தெரிவித்தார். அப்போது பேசிய தோனி, ஆட்டத்தை நன்கு புரிந்துகொண்டு ஆடக்கூடிய அனுபவ வீரர்கள் எங்கள் அணியில் உள்ளனர். அது கேப்டனின் வேலையை எளிதாக்கிவிடும். அப்படியான வீரர்கள் அணியில் இல்லை என்றால், மிகவும் சிரமமாகிவிடும். வீரர்களை சேர்த்துக் கொண்டே இருக்கிறோம். அவர்களும் நன்கு ஆடுகின்றனர். இன்னும் இரண்டு ஆண்டுகளில் அணியில் நிறைய மாற்றங்கள் நிகழும். வயது அதிகமான வீரர்கள் குறைந்த ஓவர் கிரிக்கெட்டுக்கு தேவையான உடல் தகுதியை பெற்றிருக்க மாட்டார்கள். எனவே புதிய வீரர்களை கொண்ட அணி உருவாகும் என தெரிவித்திருந்தார்.
தோனிக்கும் 36 வயதாகிவிட்டது. அடுத்த ஆண்டு உலக கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெற்றுவிடுவார். அதன்பிறகு ஓரே ஒரு ஐபிஎல் சீசன் மட்டுமே விளையாட வாய்ப்பிருக்கிறது என்பதை சூசகமாக தெரிவிக்கும் வகையில்தான் தோனியின் கருத்து உள்ளது. அதை தன்னை மட்டும் வைத்து சொல்லாமல், அணியில் இருக்கும் பெரும்பாலான வீரர்களும் அனுபவம் வாய்ந்த, அதே நேரத்தில் வயது அதிகமான வீரர்கள் என்பதால் பொதுவாக சொல்லியிருக்கிறார் என்றே கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
