கிரிக்கெட்டில் பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் தலைசிறந்து விளங்கியவர்கள், விளங்குபவர்கள் பலர். ஆனால் தனித்தனி துறைகளை கடந்து ஒட்டுமொத்தமாக ஒரு தலைசிறந்த, அறிவுக்கூர்மையான முழு கிரிக்கெட்டராக திகழ்பவர் தோனி. அவர் கேப்டன்சியிலிருந்து விலகினாலும் அவரது ஆலோசனைகள் நல்ல பலனை கொடுப்பதோடு திருப்புமுனைகளையும் ஏற்படுத்தும்.

குறிப்பாக ஸ்டம்புக்கு பின்னால் நின்றுகொண்டு பவுலர்களுக்கு அவர் வழங்கும் ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாகவும் விக்கெட்டுகளை வீழ்த்தவும் உதவும். ஒரு விக்கெட் கீப்பராக ஸ்டம்புக்கு பின்னால் நின்றுகொண்டு எதிரணி வீரர்களின் பேட்டிங் உத்திகளை அறிந்து, அவர்களின் பிளஸ், மைனஸ்களை தெரிந்துகொண்டு அதற்கேற்றபடி பவுலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கும் தோனி, ஃபீல்டிங் செட்டப்பில் கேப்டனுக்கும் ஆலோசனைகளை வழங்குவார். அவர் வழங்கும் ஆலோசனைகள் அபாரமானவை. 

தோனியின் இந்த ஆலோசனைகளின் மூலம் அதிகம் பயனடைந்தவர்கள் என்றால் அது குல்தீப்பும் சாஹலும்தான். ஸ்பின் பவுலர்களான அவர்களுக்கு அவ்வப்போது ஐடியா கொடுத்துக்கொண்டே இருப்பார் தோனி. எந்த திட்டமும் இல்லாமல் அவர்கள் நிராயுதபாணியாக இருக்கும்போது, அவர்களின் ஒரே நம்பிக்கை தோனி தான். 

இப்படி, தோனி கொடுக்கும் ஆலோசனைகளை பின்பற்றி அவர்கள் விக்கெட்டுகளை பலமுறை வீழ்த்தியிருக்கிறார்கள். நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் தோனி தான் ஒரு ஜீனியஸ் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். கடைசி விக்கெட்டாக களமிறங்கிய டிரெண்ட் போல்ட்டுக்கு எப்படி பந்துவீச வேண்டுமென்று தோனி ஒரு ஆலோசனையை வழங்கினார். அதேபோல குல்தீப் சரியாக வீச, போல்ட் ஆட்டமிழந்தார்.

குல்தீப்பிற்கு தோனி வழங்கிய ஆலோசனை ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. அவன் கண்ணை மூடிக்கிட்டுத்தான் பந்தை தடுப்பான். அதனால் நீ ரௌண்ட் தி விக்கெட்டில் பந்தை போடு  என்று குல்தீப்பிடம் தோனி கூறினார். அதுவரை ஓவர் தி விக்கெட்டில் பந்தை வீசிக்கொண்டிருந்த குல்தீப், தோனியின் ஆலோசனையின் படி செயல்பட பந்து எட்ஜாகி ஸ்லிப்பில் நின்ற ரோஹித்திடம் சென்றது. போல்ட் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பிங்கில் நின்றுகொண்டு எதிரணி பேட்ஸ்மேன்களின் பேட்டிங் உத்தியையும் அவர்களின் ஆட்டத்திறனையும் சரியாக கணித்து அதற்கேற்றவாறு ஆலோசனைகளை வழங்குவதில் வல்லவரான தோனி, இந்த செயலின் மூலம் மீண்டுமொரு முறை தான் ஒரு ஜீனியஸ் என்பதை நிரூபித்துள்ளார்.