இந்திய "ஏ' அணி மற்றும் இங்கிலாந்து இடையே மும்பையில் நடைபெற்றும் முதல் பயிற்சி கிரிக்கெட் ஆட்டத்திற்கு தோனி தலைமை ஏற்கிறார்.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் வரும் 15-ஆம் தேதி புணேவில் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதவுள்ளன.

இந்த நிலையில் இந்திய ஏ அணி மற்றும் இங்கிலாந்து இடையிலான பயிற்சி ஆட்டம் நடைபெறுகிறது.

ஒரு நாள் போட்டி மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து சமீபத்தில் விலகிய தோனி, இந்த பயிற்சி ஆட்டத்துக்கு தலைமை வகிக்கிறார்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு களம் காணும் தோனி, யுவராஜ் சிங், ஆசிஷ் நெஹ்ரா ஆகியோருக்கு இந்தப் பயிற்சி போட்டி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

ரஞ்சி கிரிக்கெட் தொடரில் 672 ரன்கள் குவித்ததன் அடிப்படையில் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார் யுவராஜ் சிங்.

இதேபோல் காயத்திலிருந்து மீண்டுள்ள ஷிகர் தவனுக்கும் இந்த ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த ஆட்டத்தில் ஷிகர் தவனும், மன்தீப் சிங்கும் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன், ஜேசன் ராய், டேவிட் வில்லே ஆகியோர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடிய கையோடு இந்த ஆட்டத்தில் களமிறங்குகின்றனர்.

அணிகள் விவரம்

இந்தியா ஏ:

ஷிகர் தவன், மன்தீப் சிங், அம்பட்டி ராயுடு, யுவராஜ் சிங், எம்.எஸ்.தோனி, ஹார்திக் பாண்டியா, சஞ்ஜு சாம்சன், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ஆசிஷ் நெஹ்ரா, மோஹித் சர்மா, சித்தார்த் கெளல்.

இங்கிலாந்து:

இயன் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ், ஜேக் பால், சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், லியாம் டாசன், அலெக்ஸ் ஹேல்ஸ், லியாம் பிளங்கெட், ஆதில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லே, கிறிஸ் வோக்ஸ்.