உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட்டை கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ளன. துடிப்பான இளம் வீரரான ரிஷப் பண்ட் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய திறமையான அதிரடி வீரர் என்பதால் அவர் அணியில் இருப்பது அவசியம் என்று முன்னாள் கேப்டன் கங்குலி ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி, இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை நிகழ்த்திய ரிஷப் பண்ட், ஆஸ்திரேலிய மண்ணிலும் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் நன்றாக ஆடினார். ஆனால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு ஆடவில்லை. 

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் ரிஷப் பண்ட் புறக்கணிக்கப்பட்டார். எனினும் அவர் உலக கோப்பை அணியில் இடம்பெறுவார் என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்திருந்தார். 

தேர்வுக்குழு தலைவர் ரிஷப் பண்டுக்கு சாதகமான கருத்தை தெரிவித்திருந்தாலும் எதுவுமே உறுதியில்லை. எனவே உலக கோப்பைக்கு முன்னதாக தனக்கு ஆட வாய்ப்பு கிடைக்கும் ஒவ்வொரு போட்டியிலும் ரிஷப் பண்ட் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் சரியாக ஆடவில்லை. ஆனால் இரண்டாவது போட்டியில் சிறப்பாக ஆடினார். 

ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடுகிறாரே தவிர, சில நேரங்களில் ஆட்டத்தின் சூழலை உணர்ந்து அதற்கேற்ப ஆடுவதில்லை. நிதானமாக களத்தில் நிலைத்து நின்று ஆட வேண்டிய தருணங்களில் அவசரப்பட்டு அசால்ட்டாக சில ஷாட்டுகளை ஆடி அவுட்டாகிறார். அவ்வாறு தொடர்ந்து செய்வாரேயானால், அது அணியில் அவருக்கான வாய்ப்பை இழுத்தடிக்க காரணமாக அமைந்துவிடும். 

அவர் மீது நல்ல அபிப்ராயம் உள்ள நிலையில், அதை பயன்படுத்தி இப்போதே அணிக்குள் நுழைந்து நிரந்தர இடம்பிடித்துவிடுவது அவருக்கு நல்லது. இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் சில தவறான ஷாட்டுகளை ஆடினார். அவர் அசால்ட்டுத்தனமாக சில ஷாட்டுகளை அடிக்க முயன்ற போதெல்லாம் தோனி அவரிடம் சென்று சில ஆலோசனைகளை வழங்கினார். 

தோனி ரிஷப் பண்ட்டை வழிநடத்திய விதம் குறித்து பேசிய ஹர்பஜன் சிங், ரிஷப் பண்ட் அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் நன்றாக பயன்படுத்தி ஆடினால் அவருக்கு உலக கோப்பையில் ஆட வாய்ப்பு கிடைக்கும். போட்டியையே புரட்டிப்போடக்கூடிய திறமை வாய்ந்தவர் ரிஷப். எனவே அவர் கண்டிப்பாக உலக கோப்பையில் ஆடவேண்டும். அனைத்து வாய்ப்புகளையுமே ரிஷப் பண்ட் சரியாக பயன்படுத்தி நன்றாக ஆட வேண்டும். நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் சில நேரம் அவசரப்பட்டு ரிஷப் பண்ட் ஆடியபோதெல்லாம் அருகில் சென்று எப்படி ஆட வேண்டும் என்று தோனி ஆலோசனைகளை வழங்கினார். அதன்பிறகு தான் சில நல்ல ஷாட்டுகளை ஆடினார் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.