ஐபிஎல் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்குகிறது. இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த முறை, சென்னை அணி மீண்டும் களமிறங்குகிறது.

மீண்டும் சென்னை மைதானத்தில் தோனி தலைமையில் சென்னை அணி களமிறங்க உள்ளதால், சென்னை அணியின் ரசிகர்களும் தோனியின் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

முதல் போட்டியில் சென்னையும் மும்பையும் மோதுகின்றன. இதற்கிடையே சென்னை அணி வீரர்கள் சென்னை வந்துவிட்டனர். சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

தோனி தலைமையில், ரெய்னா, ஜடேஜா, முரளி விஜய், பிராவோ, ஹர்பஜன் உள்ளிட்ட வீரர்களை கொண்ட சென்னை அணி, தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

தோனி பயிற்சி செய்து கொண்டிருப்பதை கண்ட ரசிகர் ஒருவர், வேகமாக ஓடிவந்து தோனியின் காலில் விழுந்தார். பின்னர், உடனடியாக அவரை எழுப்பிவிட்ட தோனி, தட்டிக்கொடுத்து அனுப்பிவிட்டார். தோனியின் காலில் ரசிகர்கள் விழுவது இது முதல் முறையல்ல என்றபோதிலும், ரசிகர் காலில் விழுந்ததும் தோனி நெகிழ்ந்துவிட்டார். சுற்றியிருந்த மற்ற வீரர்களும் வியந்து பார்த்தனர்.

தோனியின் காலில் ரசிகர் விழுந்த போட்டோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.