சஞ்சு சாம்சனுக்குப் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சஞ்சு சாம்சனுக்குப் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ரியான் பராக் வழிநடத்துவார். ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக, பராக்-ஐ ராஜஸ்தான் அணி அதிகாரப்பூர்வமாக கேப்டனாக அறிவித்துள்ளது. சீனியர் வீரர் ரவீந்திர ஜடேஜா மற்றும் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரை புறக்கணித்து, சஞ்சுவின் வாரிசை ராஜஸ்தான் அணி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.

ரியான் பராக் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன்

தலைமைப் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா, அணி வீரர்களுடன் நேர்காணல் நடத்திய பிறகே, புதிய கேப்டனாக ரியான் பராக் பெயரை பரிந்துரைத்ததாக 'இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ' தெரிவித்துள்ளது. ஜெய்ஸ்வால் மற்றும் பராக் உடன், இளம் வீரர் துருவ் ஜுரெலையும் ராஜஸ்தான் கேப்டன் பதவிக்கு பரிசீலித்தது.

ரவீந்திர ஜடேஜா ஏன் இல்லை?

சஞ்சுவுக்குப் பதிலாக சீனியர் வீரர் ரவீந்திர ஜடேஜா அல்லது யஷஸ்வி ஜெய்ஸ்வால் கேப்டனாக வருவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். கேப்டன் பதவியை முன்வைத்தே ஜடேஜாவை அணிக்கு கொண்டு வந்ததாகவும் செய்திகள் வெளியாகின. ஜெய்ஸ்வால், ராஜஸ்தான் கேப்டனாக வேண்டும் என்ற தனது ஆசையை இதற்கு முன்பே வெளிப்படையாக தெரிவித்திருந்தார். ஆனால், நீண்ட கால அடிப்படையில் அணியை வழிநடத்த இளம் வீரரான பராக் தான் சரியானவர் என்று அணி நிர்வாகம் இறுதியில் முடிவு செய்தது.

View post on Instagram

ரியாக் கேப்டனாவது இது முதன்முறை அல்ல

சென்னையில் இருந்து டிரேடிங் மூலம் வந்த ரவீந்திர ஜடேஜாவின் அனுபவத்தை விட, பராக்-இன் இளமைக்கு சங்கக்காரா முன்னுரிமை அளித்தார். பராக் ராஜஸ்தான் கேப்டனாவது இது முதல் முறையல்ல. கடந்த சீசன்களில் சஞ்சு காயமடைந்தபோது, 8 போட்டிகளில் பராக் அணியை வழிநடத்தியுள்ளார். அப்போது பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட பராக், கொல்கத்தாவுக்கு எதிராக 95 ரன்கள் எடுத்து அசத்தினார். ஆனால், பராக் வழிநடத்திய 8 போட்டிகளில் இரண்டில் மட்டுமே ராஜஸ்தானால் வெற்றி பெற முடிந்தது.

சஞ்சு சாம்சன் வெளியேறினார்

11 ஆண்டு கால உறவை முடித்துக்கொண்டுதான் சஞ்சு சாம்சன் கடந்த சீசனில் ராஜஸ்தானை விட்டு வெளியேறினார். பரஸ்பர புரிதலின் அடிப்படையிலான டிரேடிங் மூலம், 18 கோடி ரூபாய்க்கு சஞ்சுவை சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியது. அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ராஜஸ்தானுக்கு வந்தனர். சஞ்சுவின் தலைமையில் 2022-ல் ராஜஸ்தான் ரன்னர்-அப் ஆனது.