ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 15 ஆண்டுகால மோசமான சாதனை ஒன்றை இந்திய அணி சமன் செய்துள்ளது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 288 ரன்களை குவித்தது. 

இதையடுத்து 289 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. முதல் ஓவரை ஆஸ்திரேலிய அணியின் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெஹ்ரண்டார்ஃப் வீசினார். முதல் ஓவரிலேயே இந்திய அணியை தெறிக்கவிட்டார். முதல் ஓவரின் 5வது பந்து ரோஹித் சர்மாவின் கால்காப்பில் பட்டது. அதற்கு எல்பிடபிள்யூ அப்பீல் செய்தனர். ஆனால் அம்பயர் மறுத்துவிட, ஆஸ்திரேலிய அணி ரிவியூ செய்தது. பந்து லெக் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆனதால் அவுட் இல்லை. ஆஸ்திரேலிய அணி ரிவியூவை இழந்தது. ஐந்தாவது பந்தில் ரோஹித்தை மிரட்டிய பெஹ்ரண்டோர்ஃப், கடைசி பந்தில் தவானை வீழ்த்திவிட்டார். அறிமுக போட்டியின் முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தி மிரட்டினார். 

இதையடுத்து ரோஹித்துடன் கோலி ஜோடி சேர்ந்தார். ரிச்சர்ட்ஸன் வீசிய இரண்டாவது ஓவர் மெய்டன் ஆனது. மீண்டும் ரிச்சர்ட்ஸன் வீசிய நான்காவது ஓவரில் கேப்டன் கோலி மற்றும் அம்பாதி ராயுடு ஆகிய இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார். இதையடுத்து இந்திய அணி 4 ஓவரில் 4 ரன்களை மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. 4வது ஓவரிலேயே தோனி களத்திற்கு வந்துவிட்டார்.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான தோனி, 4வது ஓவரிலேயே களத்திற்கு வருவது மிகவும் வியப்புக்குரிய விஷயம். அதுவும் வலுவான டாப் ஆர்டரை கொண்ட இந்திய அணியில், 3 விக்கெட்டுகளை இழந்தபிறகு 5வது வீரராக 4வது ஓவரிலேயே களத்திற்கு வந்துவிட்டார் தோனி. தினேஷ் கார்த்திக் அணியில் இருந்தபோதிலும் தோனி ஒரு வரிசை முன்னதாக இறக்கிவிடப்பட்டார். எப்போதும் கடைசி நேரத்திலேயே இறங்குவதால் சரியாக பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைக்காத தோனிக்கு, இந்த போட்டியில் அதிகமான பந்துகளை எதிர்கொண்டு பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட, இது ஒரு நல்ல வாய்ப்பு. தோனி தினேஷ் கார்த்திக்கிற்கு முன்னதாக இறக்கிவிடப்பட்டதற்கு இது ஒரு காரணம். மற்றொன்று, கடைசி நேரத்தில் அடித்து ஆட வேண்டிய சூழல் ஏற்பட்டால் தினேஷ் கார்த்திக் அந்த பணியை செய்ய வல்லவர் என்ற வகையிலும் தோனி முன்னதாகவே இறக்கிவிடப்பட்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தோனி ஒருநாள் போட்டிகளில் 10 ஓவர்களுக்கு உள்ளாகவே பேட்டிங் ஆட வந்திருக்கிறார். 

தோனியும் ரோஹித்தும் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிவருகின்றனர். அதிகமான பந்துகளை ரன் எடுக்காமல் விட்டுவருகின்றனர். எனினும் இப்படியொரு இக்கட்டான சூழலில் பார்ட்னர்ஷிப்பே முக்கியம். இருவரும் நிதானமாக ஆடி, 10 ஓவருக்கும் அதிகமாக ஆடிவருகின்றனர். ரோஹித் சர்மா அவ்வப்போது சிக்ஸர்களை அடித்து நம்பிக்கையளித்து வருகிறார். 

இந்திய அணி மிகக்குறைந்த ரன்களுக்கு முதல் 3 விக்கெட்டுகளை இழந்ததில், ஏற்கனவே 2004ல் இருந்த மோசமான சாதனையை இந்திய அணி சமன் செய்துள்ளது. 2004ல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதல் 3 விக்கெட்டுகளை 4 ரன்களுக்கே இழந்தது. இன்றும் 4 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து அந்த பழைய மோசமான ரெக்கார்டை இந்திய அணி சமன் செய்தது.