2018ம் ஆண்டில் இதுவரை இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் ஆடியுள்ள வீரர்களில் ஷிகர் தவான் முதலிடத்தை பிடித்துள்ளார்.

டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்று விதமான போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக உள்ள விராட் கோலி, நிரந்தரமாக மூன்றுவிதமான போட்டிகளிலும் ஆடிவருகிறார். தோனி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அதனால் கோலியை தவிர்த்து இந்திய அணியில் அனைத்து விதமான போட்டிகளிலும் ஆடும் வீரர்கள் என்றால் தவான் புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோர் மட்டும்தான். 

ஏனென்றால் ரோஹித் சர்மா தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓரங்கட்டப்பட்டு வருகிறார். அதனால் வழக்கமாக ஓராண்டில் இந்திய அணிக்காக அதிகமான போட்டிகளில் ஆடிய வீரர் என்றால் அது கோலியாகத்தான் இருக்கும். 

ஆனால் இந்த முறை அது மாறியுள்ளது. இந்த ஆண்டு கோலிக்கு அதிகமான போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டது. ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி, ஆசிய கோப்பை ஆகியவற்றில் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டது. ஆனால் ஷிகர் தவான் தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் ஆடிவருவதால், 2018ம் ஆண்டில் இதுவரை இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் ஆடியதில் தவான் முதலிடம் வகிக்கிறார். 

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அனைத்துவிதமான இந்திய அணியிலும் தவான் இடம்பெற்றிருந்தார். 2018ம் ஆண்டில் இதுவரை 32 போட்டிகளில் ஆடிய தவான், இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் ஆடிய வீரராக திகழ்கிறார். கோலி 25 போட்டிகளில் ஆடியுள்ளார். 

2018ம் ஆண்டில் இதுவரை அணிக்காக அதிக போட்டிகளில் ஆடிய வீரர்கள் பட்டியலில் முதல் 4 இடங்களில் இங்கிலாந்து வீரர்கள் உள்ளனர். தலா 34 போட்டிகளில் ஆடியுள்ள ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஜோஸ் பட்லர் ஆகிய இருவரும் முதலிரண்டு இடங்களில் உள்ளனர். தலா 33 போட்டிகளில் ஆடியுள்ள இங்கிலாந்து வீரர்கள் அடில் ரஷீத் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் முறையே மூன்று மற்றும் நான்காவது இடங்களை பிடித்துள்ளனர். 

இவர்களுக்கு அடுத்தபடியாக 32 போட்டிகளுடன் தவான் நான்காமிடத்தில் உள்ளார். இந்திய அளவில் தவான் முதலிடத்தில் உள்ளார்.