தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ், கடந்த 2004ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமனார். டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி தனி முத்திரை பதித்தார்.

இவரது அதிரடி ஆட்டத்துக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. தென்னாப்பிரிக்காவைக் கடந்து சர்வதேச அளவில் டிவில்லியர்ஸ் ரசிகர்களை பெற்றுள்ளார். இந்தியாவில் டிவில்லியர்ஸுக்கு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.

மைதானத்தின் அனைத்து பந்துகளை பறக்கவிடுவதால், 360 டிகிரி என வர்ணிக்கப்படுபவர் டிவில்லியர்ஸ். ஐபிஎல்-லில் பெங்களூரு அணிக்காக ஆடிவருகிறார். 

டிவில்லியர்ஸின் கேப்டன்சியில், 2015 உலக கோப்பையை தென்னாப்பிரிக்கா தான் வெல்லும் என சர்வதேச அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக அரையிறுதி போட்டியில் நியூசிலாந்திடம் தோற்று தென்னாப்பிரிக்கா வெளியேறியது. அப்போது கேப்டன் டிவில்லியர்ஸ் மைதானத்திலே கண்ணீர் விட்டு அழுதார்.

தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தென்னாப்பிரிக்க தொடரில் டிவில்லியர்ஸ் விளையாடி வருகிறார். இந்த போட்டியின் முதல் இன்னிங்சில், தென்னாப்பிரிக்க அணி 162 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. ஆனால் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 71 ரன்களை எடுத்தார் டிவில்லியர்ஸ்.

இவ்வாறு சர்வதேச அளவில் சிறந்த வீரராக திகழும் டிவில்லியர்ஸ், ஆஸ்திரேலிய தொடருடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுதொடர்பாக டிவில்லியர்ஸ் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும், டிவில்லியர்ஸ் பேட்டிங் ஆடிக்கொண்டிருக்கும்போது, கடைசி தொடரில் அவர் ஆடிக்கொண்டிருப்பதாக வர்ணனையாளர் தெரிவித்தார்.

இதன்மூலமே டிவில்லியர்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறப்போகும் தகவல் வெளியானது. இதுதொடர்பாக விரைவில் டிவில்லியர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவார். இங்கிலாந்தில் நடைபெறும் அடுத்த உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதில் டிவில்லியர்ஸ் மிகத்தீவிரமாக இருக்கிறார்.