ஐபிஎல் 12வது சீசனுக்கான ஏலம் ஜெய்ப்பூரில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இந்த ஏலத்தில் 351 வீரர்கள் ஏலம் விடப்பட உள்ளனர். சுமரர் ரூ.150 கோடிக்கு அனைத்து அணிகளும் சேர்ந்து ஏலம் எடுக்க உள்ளன.

ஏலம் தொடங்க உள்ள நிலையில், எந்தெந்த அணி எத்தனை வீரர்களை பெற்றுள்ளது. இன்னும் எத்தனை வீரர்களை எடுக்கலாம் என்ற விவரத்தை பார்ப்போம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 8 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 23 வீரர்களை கொண்டுள்ளது. ரூ.8.4 கோடியை இருப்பு வைத்துள்ள சிஎஸ்கே அணி இன்னும் இரண்டே இரண்டு இந்திய வீரர்களை மட்டுமே எடுக்க முடியும்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி:

இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத பஞ்சாப் அணி, 4 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 10 வீரர்களை கொண்டுள்ளது. 4 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 11 இந்திய வீரர்கள் என மொத்தம் 15 வீரர்களை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுக்கலாம். 

மும்பை இந்தியன்ஸ்:

18 வீரர்களை கொண்டுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, 6 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர் என மொத்தம் 7 பேரை எடுக்கலாம். 

ராஜஸ்தான் ராயல்ஸ்:

5 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 11 இந்திய வீரர்கள் என மொத்தம் 16 வீரர்களை கொண்டுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 6 இந்திய வீரர்கள் மற்றும் 3 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 9 வீரர்களை எடுக்கலாம். 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

15 வீரர்களை கொண்டுள்ள பெங்களூரு அணி, இன்னும் 8 இந்திய வீரர்கள் மற்றும் 2 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 10 வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 இந்திய வீரர்கள் மற்றும் 5 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 12 வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். 

சன்ரைசர்ஸ் அணி 3 இந்திய வீரர்கள் மற்றும் 2 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 5 வீரர்களையும் டெல்லி அணி 7 இந்திய வீரர்கள் மற்றும் 3 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 10 வீரர்களையும் எடுக்கலாம்.